கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 7 தினங்களுக்கு முன் கட்டயமாக அனுமதி பெற வேண்டும் – மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா எச்சரிக்கை.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலையில் மாவட்ட அளவிலான சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கலந்தாய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டத்தில், சிறப்பு நிகழ்வுகளான கூட்டங்கள், பரப்புரைகள், மாநாடுகள், ஊர்வலங்கள், போராட்டங்கள், திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு சம்மந்தப்பட்ட அமைப்புகள் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான கோட்ட அளவிலான குழுவிற்கு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 7 தினங்களுக்கு முன்னதாக உரிய வாடகை கட்டணம் செலுத்தி அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். அனுமதிக்கப்படும் இடம் மற்றும் நேரங்களில் மட்டுமே தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட வேண்டும். சாலைகளில் உள்ள மைய தடுப்பான்கள் (சென்டர் மீடியன்), நடைபாதை, வடிகால்கள், கல்வெட்டுக்கள், பாலங்கள், தடுப்புச் சுவர்கள், கைப்பிடிச் சுவர்கள், சாலைப் பாதுகாப்பு உபகரணங்கள், மின்கம்பங்கள் மற்றும் பொதுச் சாலைகளின் நில எல்கைகளுக்கு உட்பட்ட இடங்களில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதி இல்லை.
பொது சாலைகளின் குறுக்கே போக்குவரத்திற்கு இடையூறாக மதசார்புடைய நிகழ்வுகள், திருவிழாக்கள் தொடர்பான அலங்கார வளைவுகள் மற்றும் அலங்கார தோரணங்கள் எதுவும் அமைத்தல் கூடாது. மேலும், அரசு புறம்போக்கு நிலங்கள், பொது இடங்கள், பொது உபயோகத்திற்கான அனைத்து இடங்களிலும் மதசார்புடைய கட்டுமானங்கள், அடையாளங்கள் எதுவும் புதிதாக ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு புதிதாக அமைக்கப்படும் மதசார்புடைய கட்டுமானங்கள், அடையாளங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினரால் அகற்றப்படுவதுடன், தொடர்புடைய நபர்கள் மீது காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தெரிவித்தார்.