கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாக வரும் சனி மற்றும் ஞாயிறு (22.11.2025, 23.11.2025) ஆகிய இரு தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாங்கள் எப்போதும் வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் செயல்படும் உதவி மையங்களுக்கு நேரடியாக சென்று, கணக்கீட்டு படிவங்களை பெற்றும், பூர்த்தி செய்த படிவங்களையும் வழங்கலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, சிறப்பு தீவிர திருத்தம்-2026 ஆனது தமிழ்நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தங்கள் பாகத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் உங்கள் வீடுகளுக்கு வந்து கணக்கீட்டு படிவங்களானது ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வாக்காளராகிய நீங்கள் உங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து தங்கள் பாகத்திற்குரிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப வழங்க வேண்டும். இந்த கணக்கீட்டு படிவத்தினை நிரப்பும் போது 2002-ம் ஆண்டிற்கான சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களையும் இந்த படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால், www.voters.aci.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக மேற்படி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த படிவத்தினை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு கணக்கீட்டு படிவத்தில் மேல்பகுதியில் குறிப்பிடப்பட்டு உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி / ஊராட்சி அலுவலகங்களில் செயல்பட்டு வரும் உதவி மையங்களை நேரில் அணுகலாம். அந்த உதவி மையங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் இந்த படிவத்தினை நிரப்புவது தொடர்பாக தேவையான உதவிகளை செய்வார்கள்.
இவ்வாறு தங்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு கணக்கீட்டு படிவங்களையும் பூர்த்தி செய்து படிவத்தின் கீழ் பகுதியில் கட்டாயமாக கையொப்பமிட்டு அதன் ஒரு பிரதியை வாக்காளர் தங்கள் வசமும் மற்றொரு பிரதியை தங்கள் வீடுகளுக்கு இந்த படிவங்களைசேகரிக்க வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வாக்குச்சாவடி நிலை முகவர்களிடம் திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு கணக்கீட்டு படிவத்தை கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைத்தால் மட்டுமே தங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களில் 2025 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இதுவரை கணக்கீட்டு படிவம் பெறாத அனைத்து வாக்காளர்களுக்கும் இறுதி வாய்ப்பாக வரும் சனி மற்றும் ஞாயிறு (22.11.2025, 23.11.2025) ஆகிய தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாங்கள் எப்போதும் வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் செயல்படும் உதவி மையங்களுக்கு நேரடியாக சென்று, அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து தங்களது கணக்கீட்டு படிவத்தைப் பெற்று நிரப்பி திரும்ப வழங்கலாம். ஏற்கனவே கணக்கீட்டு படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்த வாக்காளர்களும் தங்களது கணக்கீட்டு படிவத்தினை வாக்குச்சாவடி உதவி மையங்களில் வழங்கலாம்.
மேலும் வரும் திங்கள் (24.11.2025) முதல் வாக்காளர் தங்கள் பூர்த்தி செய்த படிவங்களை வழங்குவதற்கு, தங்களது வாக்குச்சவாடி நிலை அலுவலர்களை தொடர்பு கொண்டு, அவர்களிடம் நேரிடையாக சென்று வழங்க வேண்டும். எனவே, வாக்காளர்களாகிய உங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி நீங்கள் உங்கள் கணக்கீட்டு படிவத்தை விரைவில் பெற்று, பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 மற்றும் 23 ம் தேதிகளில் மீண்டும் சிறப்பு முகாம்
