எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் செலவினங்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026யை எதிர்கொள்வது குறித்து தேர்தல் பணியில் ஈடுப்பட உள்ள அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கலந்தாய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்-
இந்திய தேர்தல் ஆணையம், பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. இந்த நெறிமுறைகளை தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் முழுமையாகவும், முறையாகவும் பின்பற்ற வேண்டும். நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள், டோக்கன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறதா என தொடர்ந்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். குறிப்பாக, பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உட்பட கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அனைவரும், சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையினை முறையாக எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகளும், ஏடிஎம் சேவைக்காக பணம் நிரப்ப செல்லும் வங்கி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எந்தெந்த இடங்களில் ஏடிஎம் இயங்கி வருகிறது மற்றும் வங்கி கிளைகள் பற்றிய விவரங்களை எடுத்து செல்வதோடு, எழுத்துப்பூர்வமாக கொண்டு செல்ல வேண்டும் என அனைத்து வங்கி மேலாளர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
பேரூராட்சிகளை பொறுத்தவரை, மாவட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சிகளில் பணிபுரியும் செயல் அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் அன்றாடம் வசூலாகும் வீட்டுவரி உள்ளிட்ட வரிவசூல் செய்தமைக்கான அனைத்து சான்றுகளையும் வைத்திருக்க பேரூராட்சிகள் உதவி இயக்குநரிடம் (பொ) கேட்டுக்கொள்ளப்பட்டது. மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும், மகளிர் சுயஉதவிக்குழுவினர், அரசியல் கட்சி, பிரபலங்கள் உள்ளிட்டோர் அளிக்கும் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குகிறார்களா என்பதை மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் கண்காணிப்பதோடு, அவ்வாறு பரிசுப்பொருட்கள் பெறும் சுயஉதவிக்குழுக்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்த வேண்டும்
மேலும் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்கும் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் சிவிஜில் செயலி பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்களுக்கு சிவிஜில் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போக்குவரத்து துறையினை பொறுத்த வரை பேருந்துகளில் பயணம் மேற்கும் பயணிகள் குறித்து, சந்தேகம் ஏற்படின், காவல்துறையினருக்கு தகவல் அளித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏதும் இல்லாமல் பரிசோதனை மேற்கொள்ள பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. காடு மலைகளில் போதைப்பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா என்பதை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. எனவே அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து, தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹீ முகம்மது நசீர், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் (பொ) பாண்டியராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், பொதுமேலாளர் பாலசுப்பிரமணியம் (தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில்), உசூர் மேலாளர் சுப்பிரமணியம், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
