வாக்குப்பதிவு நாள் அன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – மருத்துவ அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாவட்ட மருத்துவ அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர்கள், மாநகர் நகர்நல அலுவலர்களுடான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மருத்துவர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவதையொட்டி, தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன்ஒருபகுதியாக வாக்குப்பதிவு நாள் அன்று, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது நிலவி வரும் கோடை வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் குளோரின் கலந்த தண்ணீரை குடிநீர் தொட்டிகளில் நிரம்பி வழங்கப்படுவதை மாநகர நகரநல அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் வாக்குச்சாவடி மையங்களின் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும் முழு சுகாதாரத்துடனும் வைத்துக்கொள்ள தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
அவசர கால மருத்துவ முதலுதவி பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் வாக்குச்சாவடிகளுக்கு அருகாமையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை பிரிவு தயார் நிலையில் இருக்க வேண்டும் என துறை அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மாவட்டத்திற்கு உட்பட்ட 1914 வாக்குச்சாவடி மையங்களிலும் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் வழங்க அறிவுறுத்தப்பட்டது. வாக்குப்பதிவு நாள் அன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் நமச்சிவாயம், இணை இயக்குநர் மருத்துவ பணிகள் (பொ) ரவிக்குமார், வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
வாக்குப்பதிவு அன்று மருத்துவர்கள் செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்
