டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28.8.2026 வேலைநிறுத்தம்
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டம் பணியாளர்கள், பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 24000ம் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து 28.8.2026 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நாம்தமிழர் தொழிற்சங்க மாநிலத் தலைவர் மோஸ்லின் பியர்சன் தெரிவித்து உள்ளார். இது குறித்து தெரிவிக்கையில் டாஸ்மாக் பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், 23 ஆண்டுகால பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
மேலும், பணியின்போது உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசு பணி வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு 8 மணி நேர வேலை நேரம், பண்டிகைக்கால விடுமுறை , வாராந்திர மற்றும் மாதாந்திர விடுமுறைகள் ஆகியவற்றை உறுதி செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
மது விற்பனையைத் தவிர பிற பணிகளைச் செய்யவும், நிர்ணயிக்கப்பட்ட 8 மணி நேரத்திற்கு மேலாக மது விற்பனை செய்யவும் பணியாளர்களை நிர்பந்திக்கும் நிலையில், அவர்கள் மேற்கொள்ளும் கூடுதல் பணிக்கும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலான பணிக்கும் உரிய மிகைநேர ஊதியம் வழங்க வேண்டும்.
கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சிக்கு பணியாளர்கள் தொடர்ந்து உழைத்து வருகின்றனர். ஆனால், நீண்டகாலமாக பணியாற்றியும் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் முழுமையாக கிடைக்காத நிலை தொடர்கிறது. கேரளா மாநில விப்ரேஜ் பணியார்கள் போல் ஊதியமும் பணியாளர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரமும் சமூகப் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு கட்டங்களில் அரசுக்கும் நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கங்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் இதுவரை உரிய தீர்வு காணப்படவில்லை. இதனால் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
23 ஆண்டுகளாக உழைத்து வரும் டாஸ்மாக் பணியாளர்களின் நியாயமான உரிமைகளுக்காக நடைபெறும் ஒன்றுபட்ட தொழிலாளர் போராட்டமாகும்.
எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசு பணி, 8 மணி நேர வேலை நேரம், விடுமுறைகள் மற்றும் மிகைநேர ஊதியம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் காலக்கெடுவுடன் கூடிய தீர்வை அறிவிக்க வேண்டும்.
28.8.2026 நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்து டாஸ்மாக் பணியாளர்களும் முழுமையாக ஆதரவு அளித்து பங்கேற்க வேண்டும். பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தொழிற்சங்கங்களும், பொதுமக்களும் ஆதரவு வழங்கி போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நாம்தமிழர் தொழிற்சங்க மாநிலத் தலைவர் மோஸ்லின் பியர்சன் கேட்டுக்கொண்டு உள்ளார்.