கன்னியாகுமரி கோட்டம் சார்பில்
அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு ஆள் தேர்வு
செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு : கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் அஞ்சல் ஆயுள் காப்பீடு பணிக்கு, நேரடி முகவராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அஞ்சலக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியிருக்கிறார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
சுய தொழில் செய்பவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மகளிர் மேம்பாட்டு ஊழியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு கல்வித் தகுதியுடன் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அலுவலர்களும் கள அதிகாரியாகவும் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். நேரடி முகவர்களுக்கு அவர்கள் செய்யும் வணிகத்திற்கு ஏற்ப 4 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் நேரடி முகவர்கள் ரூ.5000 க்கு என்எஸ்சி அல்லது கேவிபி பத்திரத்தில் தங்களது பெயரில் ஏதேனும் அஞ்சல் அலுவலகத்தில் முதலீடு செய்யவேண்டும். அவர்களது உரிமம் முடியும் போது, பத்திரத்தில் முதலீடு செய்த பணம், திட்டத்திற்குரிய வட்டியுடன் திரும்ப கிடைக்கும்.
மேலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு, எவ்வித சந்தை அபாயங்களும் அல்லாத அரசின் நேரடி கட்டுபாட்டில் செயல்படும் திட்டம் என்பதால், பொதுமக்கள் இணைந்து பயன் பெறலாம் என்று கூறினார்.
நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு விண்ணப்பங்களை நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். புகைப்படத்துடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும், அதனுடன் பான் அட்டை, ஆதார் அட்டை, 10-ம் வகுப்பு கல்வி சான்றிதழை இணைத்து அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர், கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம், நாகர்கோவில் – 629001 என்ற முகவரிக்கு 30.9.2023 க்குள் கிடைக்குமாறு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு கன்னியாகுமரி அஞ்சல் ஆயுள் காப்பீடு வளர்ச்சி அலுவலரை 9443311812 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.