திருப்புவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட வைகை நதிக்கரை பகுதியில் நீர் நிலைகள் பாதுகாப்பு குழுவின் சார்பில் மாபெரும் தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் துவக்கி வைத்து, தூய்மை பணியில் ஈடுபட்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட வைகை நதிக்கரை பகுதியில் நீர் நிலைகள் பாதுகாப்பு குழுவின் சார்பில் மாபெரும் தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், துவக்கி வைத்து, தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி, சுற்றுச்சூழலியலை நிலை நிறுத்துவதற்கும் நீடித்து நிலைத்த அனைத்து உயிர்களுக்கான வாழ்வியல் பயன்பாட்டிற்கும் அடிப்படையாக திகழ்கின்ற நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான சிறப்பான நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளை நீடித்து நிலைத்த வகையில் பயன்படுத்துதல், மேம்படுத்துதல், பாதுகாத்தல், தேவைப்படும் நீர் நிலைகளை மறுசீரமைப்பு செய்திடல், பயன்பாடாற்ற நீர்நிலைகளை கண்டறிந்து மீட்டெடுத்தல், உரிய வகையிலான உரித்தான நீர் மேலான்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளல், மழை நீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளல், நீர் மாசடைவதை கண்டறிந்து அதனை தடுத்தல், நீர் நிலைகளின் பரப்புக்களை பாதுகாத்திடும் வண்ணம் பூங்காக்கள், கரைவேலிகள் அமைத்தல், மரம் நடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நீர்நிலை ஆக்கரமிப்புகளை அகற்றுதல், தூர்வாருதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நீர் நிலைகளை பாதுகாத்து நீர் இருப்பின் கொள்ளவினை நிலை நிறுத்துதல் போன்ற தொடர்நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தினால் திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளும் மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளில், வைகை ஆறு பெரும்பங்கு வைக்கிறது. எனவே, நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியினை வைகை ஆற்றில் இருந்தே தொடங்கிடும் பொருட்டு, திருப்புவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட வைகை நதிக்கரை பகுதியில் மாபெரும் தூய்மை பணியானது தொடங்கப்பட்டு உள்ளது.
இப்பணியில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள், விவசாயிகள், மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு உறுப்பினர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் இப்பணி சிறப்பாக தொடங்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து நீர் நிலைகளை தூய்மைப்படுத்தி, நீர்நிலைகளை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது.
அனைத்து உயிர்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக திகழ்ந்துவரும் தண்ணீரினை மாசடையாமல் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும். இதனை கருத்தில் கொண்டு, நமது வீட்டின் சுற்றுப்புறத்தினை தூய்மையாக பராமரிப்பது போல் நீர் நிலைகளை பாதுகாப்பதிலும் நமது பங்களிப்பு வெகுவாக இருந்திடல் வேண்டும்.
மேலும், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நீர் நிலைகள் பாதுகாப்பு குழுவில் பணியாற்றிட ஆர்வமுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் இதர தன்னார்வ தொண்டு அமைப்புக்களை சார்ந்தோர்கள், மாவட்ட நிர்வாக தொலைபேசி எண்ணான 04575-240952 என்ற தொலைபேசி எண் மூலம் அல்லது distptsvg@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு, நீர் நிலை பாதுகாப்பில் தங்களது பங்களிப்பினை அளித்திட முன் வரலாம் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், வைகை ஆற்று கரை பகுதியிலிருந்த அமலை செடிகள், முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் கலையம் மற்றும் பொதுமக்களால் ஆற்றில் விடப்பட்ட துணிகள், நெகிழி கழிவுகள் போன்றவைகளை, நதிக்கரையில் சுமார் 300 மீட்டர் சுற்றளவில் தூய்மை படுத்தும் பணி, மாவட்ட ஆட்சியாளர் அவர்களுடன், நீர் நிலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள், மாணாக்கர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட்டு, அதில் 2.800 டன் குப்பைகளும் சேகரம் செய்யப்பட்டது. சேகரம் செய்யப்பட்ட அக்குப்பைகளை, பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் மூலம் பேரூராட்சி சுகாதார வாகனம் மற்றும் ஜே.சி.பி வாகனம் ஆகியவைகளைக் கொண்டு அப்புறப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி செயலர் கந்தசாமி, நீர்வளத்துறை செயற் பொறியாளர் பாரதிதாசன், உதவி இயக்குநர்கள் ராஜா (பேரூராட்சிகள்), குமார் (ஊராட்சிகள்), நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவி பொறியாளர் சுரேஷ்குமார், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் மற்றும் நீர் நிலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள், மாணாக்கர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.