மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் தோவாளை மற்றும் திருவரம்பு ஆகிய இடங்களில் சிறப்பிக்கப்பட்டது. தோவாளை ஸ்ரீ கற்பக விநாயகர் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவில் நாகர்கோவில் கிழக்கு உப கோட்டம் அஞ்சல் ஆய்வாளர் கண்மணி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டார். தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்தினி பகவதியப்பன் ஆதார் சேவைகளை தொடங்கி வைத்தார்.
திருவரம்பு சி எஸ் ஐ சமுதாய கூடத்தில் வைத்து நடைபெற்ற விழாவில் தக்கலை உபகோட்டம் அஞ்சல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரீகுமார் வரவேற்புரை வழங்கினார். கன்னியாகுமரி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பெனிலா ரமேஷ், திருவட்டார் பேரூராட்சி தலைவர் ஸ்ரீ.சசி, வட்டார வளர்ச்சி அலுவலர், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் சாந்தி, முதுநிலை வருவாய் ஆய்வாளர், திருவட்டார், துளசிதரன், தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, திருவரம்பு, மோகன் குமார், மேலாளர், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இவ்விழாவில் சிறுசேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் இணைதல், மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் வழியாக பெறுவதற்கு கணக்குகள் தொடங்குதல், பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீடு திட்டங்கள் தொடங்குதல், அஞ்சல் துறையின் அனைத்து சேவைகளை பற்றிய விவரங்களை மக்களுக்கு தெரிவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.