
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களுக்கு கற்பிக்கும் முறை குறித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு மேற்கொண்டு, அதில் அதிக நாட்கள் விடுமுறை எடுத்த மாணவ மாணவியர்களிடம் விடுமுறை எடுப்பதை தவிர்த்து படிப்பில் அதிக கவனம் செலுத்தி நன்றாக படித்து, வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வருங்காலங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்திட வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் மாணவ மாணவிகளுக்கு ஆரம்பித்திலேயே பள்ளி படிப்போடு என்.சி.ஹெச்.எம், ஜே.இ.இ, எப்.டி.டி.ஐ, ஐ.எம்.யு உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான நுழைவு தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ள வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு படித்து முடித்து செல்லும் மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு உதவித்தொகைகள், வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு உதவித்தொகை, திறன்பயிற்சிகள் உள்ளிட்டவைகள் வழங்கி வருகிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் நன்றாக பள்ளிப்படிப்பை முடித்து, தங்களது எதிர்கால கனவுகளை நினைவாக்கும் வகையில் குறிக்கோளுடன் படித்து, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும். எனவே நீங்கள் அனைவரும் இப்போது இருந்தே கடினமாக உழைத்து படிக்க வேண்டும் என மாணவ மாணவியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் ஆசிரியர்களிடம் நீங்கள் அனைவரும் பொறுப்புடன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து, கடந்த ஆண்டை விட நடப்பு கல்வியாண்டில் முழு தேர்ச்சி சதவீதத்தை அடைவதோடு, கன்னியாகுமரி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திட முழு பங்காற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தெரிவித்தார்.