கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் மேற்பார்வையில் காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் சாலை போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓப்பன் ஹவுஸ் எனப்படும் நிகழ்ச்சி நாகர்கோவில் ஆயுதப்படையில் வைத்து நடந்தது.
இந்த ஓப்பன் ஹவுஸ் நிகழ்ச்சியில் நாகர்கோவில் கருணை இல்லத்தில் வளர்க்கப்படும் குழந்தைகள் கலந்து கொண்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தை சுற்றி பார்த்தனர். ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்கா சுற்றி காண்பிக்கப்பட்டது.
மேலும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காததால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை அதிவிரைவுப்படை காவலர்கள் நாடகமாக நடித்து காட்டி குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாவட்ட ஆயுதப்படை போலீசார் பயன்படுத்தும் ஆயுத வகைகள் பற்றியும் காவல் துறையினரின் கவாத்து பற்றியும் செயல்முறை விளக்கத்துடன் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது.
மேலும் அந்த குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் உதவி காவல் கண்காணிப்பாளரால் குழந்தைகள் மற்றும் குழந்தைகளை பராமரிப்பவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குற்றபிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுஜாதா, நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.