மாதம் ரூ.3000 ஓய்வூதியம்.. 2 லட்சம் வரை காப்பீடு.. மத்திய அரசின் திட்டத்தில் பதிவு செய்ய அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் கார்டு பல சலுகைகளை வழங்குகிறது. ஓய்வூதியம், இறப்புக் காப்பீடு மற்றும் ஊனமுற்றால் நிதியுதவி போன்ற நன்மைகளைப் பெற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை உடனே அணுகி இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்து கொள்ளலாம்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 2021 ஆம் ஆண்டில் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்காக தேசிய தரவுத்தளமான இஷ்ரம் போர்ட்டலை அறிமுகப்படுத்தியது. அமைப்புசாரா துறையில் பணிபுரியும் எவரும் தொழிலாளர் அட்டை அல்லது இ-ஷ்ரம் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களின் முதல் தேசிய தரவுத்தளம் இதுவாகும். இ-ஷ்ரம் கார்டு மூலம் தொழிலாளர்கள் பல்வேறு சலுகைகளைப் பெறலாம்.
இதன் கீழ், அமைப்புசாராத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம், இறப்புக் காப்பீடு, ஊனமுற்றால் நிதியுதவி போன்ற பலன்களைப் பெறலாம். இதன் கீழ், பயனாளிகள் இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் 12 இலக்க யுஏஎன் எண்ணைப் பெறுவார்கள்.
இ-ஷ்ரம் கார்டின் நன்மைகள்:
இதன்படி, 60 வயதுக்கு மேல் அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும். இதன் கீழ், 2,00,000 ரூபாய் இறப்புக் காப்பீடும், ஒரு தொழிலாளியின் பகுதி ஊனம் ஏற்பட்டால், 1,00,000 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி (இ-ஷ்ரம் கார்டு வைத்திருக்கும் அமைப்பு சாராத் தொழிலாளி) விபத்து காரணமாக இறந்தால், அவரது மனைவிக்கு அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
• ஆதார் அட்டை
• ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்
• வங்கி கணக்கு.
தொழிலாள்ர்கள் இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும் 78 துணை அஞ்சல் அலுவலகங்களிலும் 188 கிளை அஞ்சல் அலுவலகங்களிலும் வரும் 25.11.2024 முதல் 14.12.2024 வரை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்பதை கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்து உள்ளார்.