சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கும் முன்பே அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம். இந்த ஆலயம் 1924-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அர்ச்சிக்கப்பட்டது. 1925 மே 17-ல் சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டார். புனிதையின் பேரருளிக்கம் (புனிதப்பண்டம்) ஆலயத்தில் உள்ளது. வரும் 2025 மே மாதம் 17 ஆம் தேதி புனிதையின் 100-வது ஆண்டு புனிதர் பட்ட நூற்றாண்டு விழாவை பக்தர்கள் கொண்டாட உள்ளனர்.
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயத்திலும் புனிதையின் புனிதர் பட்ட நூற்றாண்டு விழா வரும் 17 ஆம் தேதி நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு அகமதாபாத் மறை மாவட்ட ஆயர் பேரருள்பணி அத்தனாசியூஸ் ரெத்தினசாமி தலைமையில், காரங்காடு வட்டார முதல்வர் சகாயஜஸ்டஸ் மறையுரையில் சிறப்பு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. புனிதையின் புனிதர் பட்ட நூற்றாண்டு விழா நினைவாக கண்தானம், உடல் தானம் மற்றும் ரத்த தானம் செய்வதற்கான ஆரம்ப விழாவும், பாதுகாவலியின் தங்க தேர்பவனியும் தொடர்ந்து இரவு அன்பின் விருந்தும் நடக்கிறது. ஏற்பாடுகளை கண்டன்விளை பங்குத்தந்தை அருட்பணி மரிய வின்சென்ட், பங்கு அருட்பணிப் பேரவை துணைத் தலைவர் ஜஸ்டஸ் , செயலாளர் ஐசக், துணை செயலாளர் ஜாக்கிர் சுபிஷ், பொருளாளர் வறுவேலாள், பங்கு இறைமக்கள் ஆகியோர் இணைந்து செய்து உள்ளனர்.