“உங்களைத்தேடிஉங்கள்ஊரில்திட்டம்” என்ற புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், பிரதி மாதம் மூன்றாவது புதன்கிழமை ஒரு வருவாய் வட்டத்தினை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அனைத்துத் துறை உயர் அலுவலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள தற்கிணங்க கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம்” 19.6.2024 முற்பகல் 9. மணி முதல் 20.6.2024 முற்பகல் 9 மணி வரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையின் கீழ் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முதல் நிலை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முதல் நிலை அலுவலர்களும் 19.6.2024 புதன்கிழமை அன்று முற்பகல் 9 மணி முதல் கிள்ளியூர் வட்டத்தில் அரசால் நிறைவேற்றப்பட்டு வரும் முக்கியமான திட்டங்கள், அரசு அலுவலகங்கள், பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். அன்றைய தினம் மாவட்ட ஆட்சியாளர் பிற்பகல் 4.30 மணி முதல் 6 மணி வரை கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தும், கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அதனைக் கேட்டு நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும்.
அதனைத் தொடர்ந்து மாலை 6 மணி முதல் மாவட்ட ஆட்சியாளர் மாவட்டத்தில் உள்ள முதல் நிலை அலுவலர்களுடன் நகர்ப்புறம் மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு சென்று திட்டப்பணிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து இரவு தங்க உள்ளனர். பின்னர் மறுநாள் காலை (20.06.2024) காலை 6 மணி முதல் 9.00 மணி வரை கிள்ளியூர் வட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு சென்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் ஆய்வு செய்ய உள்ளனர்.
எனவே கிள்ளியூர் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அனைத்துத் துறை உயர் அலுவலர்களிடம் தங்களது பகுதிக்கு தேவைப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் ஆகியவற்றையும், தங்களது பகுதிகளில் உள்ள குறைகளையும் நேரில் தெரிவித்து அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
