கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது பத்திரிக்கை செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்-
தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படுகிற ஸ்ரீ நாராயண குரு சமூக அடுக்குகளில் ஒடுக்கப்பட்டிருந்த ஈழவ சமுதாய தலைமுறைகளை சமூக அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுத்து சுயமரியாதையுடன் தலைநிமிரச் செய்தவர் என்றும், மாகான் முன்வைத்த உலகளாவிய சகோதரத்துவம் என்னும் கோட்பாடு அனைத்து மதத்தவராலும் போற்றப்படுகிறது என்றும், வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாருடன் சமூக நீதிக்காக போராடியவர் என்றும், ஸ்ரீ நாராயண குரு பிறந்த நாள் கேரள மாநிலத்தில் பொது விடுமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்ரீ நாராயண குருவை பின்பற்றும் மக்கள் பெருவாரியாக வாழ்ந்து வருவதால், அச்சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20-ம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
20.8.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 செப்டம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (14.9.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி மூன்று வட்டங்களில் உள்ளூர் விடுமுறையினை துய்க்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலவாணி முறிச் சட்டம் 1881 இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 20.8.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பத்திரிக்கை செய்தியில் தெரிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 தாலுகாவுக்கு ஆகஸ்ட் 20 ம் தேதி உள்ளூர் விடுமுறை
