
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் சார்பில் 15வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில் நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கி கல்லூரி மாணவ மாணவியர்களிடையே பேசுகையில்-
18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் மற்றும் இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கக்கூடிய உரிமை உள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கியுள்ளோம். குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிம அட்டை, பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு அட்டைகள் வைத்திருந்தாலும் அவை அனைத்தும் நம்மை அடையாளப்படுத்த மட்டுமே பயன்படுகின்றன. ஆனால் வாக்காளர் அடையாளம் மட்டுமே நம்முடைய ஜனநாயக கடமையான தேர்தலில் வாக்களிக்க பயன்படுகிறது. எனவே வாக்காளர்களாக தங்களை இணைத்து கொள்ளாத ஒவ்வொருவரும் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பித்தினை பதிவு செய்து வாக்காளர் அடையாளம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை எந்த விதமான சமய பாகுபாடு இல்லாமல் மற்றும் கட்சி பாகுபாடு இல்லாமல் ஒவ்வொரு குடிமகனும் சுயமாக சிந்தித்து தங்களது வாக்கை செலுத்த வேண்டும். இந்த பிரதிநிதிக்கு வாக்கு செலுத்துவதன் மூலம் நம்முடைய எதிர்காலத்திற்கு மாற்றங்களை கொண்டு வருவார்களா என்று சுயமாக சிந்தித்து வாக்களிக்க அனைவரும் முன்வரவேண்டும். நம்முடைய மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த தேர்தல்களில் 70 முதல் 75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என புள்ளவிவரம் தெரிவிக்கின்றது. வருகின்ற தேர்தல்களில் 100 சதவீதம் வாக்களித்த மாவட்டமாக நமது கன்னியாகுமரி மாவட்டம் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்து 85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் கூட தங்கள் வாக்குகளை செலுத்திட ஆர்வமுடன் முன்வருகின்றனர். ஆனால் இளைஞர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த முன்வருவதில்லை என்பதை இத்தருணத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுநாள் வரை 52,000க்கு அதிகமானவர்கள் புதிய வாக்காளர்களாக தங்களை இணைத்துக்கொள்ள விண்ணப்பித்து உள்ளார்கள். அவர்களில் 12,824 வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க விண்ணப்பித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அனைத்து வாக்காளர்களும் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையினை ஆற்றிட முன் வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பேசினார்.
முன்னதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் அரசு துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் மக்களாட்சியின் மீது பற்றுடைய நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.
அதனைத்தொடர்ந்து 2025 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக சிறப்பாக பணிபுரிந்த 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் சுவர் விளம்பர போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கத்தொகையினையும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லலித்குமார், தெ.தி.இந்து கல்லூரி முதல்வர் முனைவர் பத்மநாபன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், தேர்தல் தனி வட்டாட்சியர் வினோத், ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ஜயப்பன், முனைவர் பழனிகுமார், தெ.தி.இந்து கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.