சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர்ப்பகுதியில் கதர் கிராமத் தொழில்கள் வாரிய விற்பனைத்துறையின் சார்பில், காந்தியடிகளின் 155-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தலைமையில், காந்தியடிகளின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி வைத்து, கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து தெரிவிக்கையில்,
மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்த தின விழா இன்றையதினம் இந்தியா முழுவதும் வெகுச்சிறப்பாக எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. கதர் ஒரு வாழ்க்கைத் தத்துவம். கதர் என்பது வெறும் நூல் இலைகளால் ஆன துணி மட்டுமல்ல, அது சுதந்திர போராட்ட காலத்தில் போராட்ட வீரர்களுக்கு கிடைத்த ஒரு பேராயுதம். அண்ணல் காந்தியடிகள் சுதேசிப் பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சுதந்திர போராட்ட ஆயுதமாக கையால் நூற்கும் இராட்டையை பயன்படுத்தி, கதர் நெசவில் ஒரு மாபெரும் புரட்சி ஏற்படுத்தி, அன்னிய துணிகளை தீயிட்டு கொளுத்தினார். கதர் இன்றைய கணினியுகத்தில் கோடான கோடி அடிதட்டு மக்களுக்கு கிடைத்த அட்சய பாத்திரம். கதர் தொழிலால் வேலையில்லா திண்டாட்டத்தை விரட்டியடிக்க முடியும் என்பதை செயல் வடிவில் நிரூபித்து காட்டியவர் தேசப்பிதா காந்தியடிகள் ஆவார்.
நீங்கள் அணியும் கதராடைகளால் பல அடிதட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நடக்கிறது என்பதை உணருங்கள். இன்று நீங்கள் வாங்கும் கதராடைகளால் ஏழை மக்களின் எதிர்காலம் சிறப்பாகிறது. தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான ஏழை எளிய நூற்போர், நெய்வோர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பை அளிப்பதன் மூலம் நாட்டின், பொருளாதார வளர்ச்சிக்கும் பேருதவி செய்து வருகிறது.