கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர், பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களுடன்,
திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் மேற்கொண்டனர்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களுடன், திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தின் போது, அமைச்சர்கள் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அத்திட்ட செயல்பாடுகள் குறித்தும், மேம்படுத்த வேண்டிய பல்வேறு கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஒவ்வொரு மாவட்ட வாரியாக துறை ரீதியாக பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் மற்றும் களஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆதிதிராவிடர் அரசு பள்ளி / கல்லூரி மாணாக்கர்கள் விடுதியின் செயல்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. துறை சார்ந்த அலுவலர்கள் சட்டமன்ற பேரவை அறிவிப்பின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான கூடுதல் கட்டிடங்கள், நிதி நிலை, பணியளார்கள் நியமிப்பு ஆகியன குறித்து எடுத்துரைக்கலாம்.
மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான ஆதிதிராவிட நலக்குழு மற்றம் மாவட்ட அளவிலான வன்கொடுமை விழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆகிய குழுக்களை சார்ந்தோர்கள், சமுதாயக்கூடம் கட்டுதல், சுகாதார வளாகம் கட்டுதல், பல்வேறு வங்கிக்கடனுதவிகள், கல்விக்கடனுதவிகள், துப்புரவு பணியாளர்களுக்கான ஒதுக்கீடு வீடுகள், மாணாக்கர்களுக்கான விடுதி கட்டிடங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரி்க்கைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.
அக்கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, இக்கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டச் செயல்பாடுகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விபரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர். அதில், மயானம் மற்றும் மயான பாதை, இலவச வீட்டு மனை பட்டா, வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள் விடுதிகள் ஆகியவைகளின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடுகள், மேம்படுத்த வேண்டிய வசதிகள், அரசு ஆதி திராவிட பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களின் எண்ணிக்கை, 2022-2023 கல்வியாண்டில் அரசு ஆதி திராவிட பள்ளிகளில் பயின்ற 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணாக்கர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்கள் மற்றும் அரசு ஆதிதிராவிடர் விடுதியில் தங்கிப் பயல்கின்ற மாணாக்கர்கள் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விகிதங்கள் ஆகியவைகள் குறித்து அமைச்சர்கள் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவக்குமார், மாவட்ட அளவிலான வன்கொடுமை விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் சேங்கைமாறன், பிச்சை, பொன்னுச்சாமி மற்றும் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் செல்வகுமார், சேது, பூமிநாதன், முருகன் மற்றும் சிவகங்கை நகர் மன்றத்தலைவர் துரைஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.