தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர்,
பிரான்மலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைத்தனர்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரான்மலை ஊராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராகவும் முதன்மையான முதலமைச்சராகவும் திகழ்ந்து வருகிறார். அந்த வகையில், கல்வி மற்றும் மருத்துவத்தினை தனது இரு கண்களாக கொண்டு, அதில் கூடுதல் கவனம் செலுத்தி, அதற்கென அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்தும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பொதுமக்களின் உடல் நலத்தினை பேணிக்காக்கின்ற பொருட்டு, மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 ஆகிய திட்டங்கள் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் சிறந்து விளங்கி வருகிறது.
மேலும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே மருத்துவ முகாம்களும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள் ஆகியவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி, திருப்புவனம் மற்றும் இளையான்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு, செவிலியர் குடியிருப்பு, துணை செவிலியர் மற்றும் தாதியர் பயிற்சிப்பள்ளி கூடுதல் விடுதி, ஆய்வக கூடுதல் கட்டிடங்கள் ஆகியவைகளை ஒருங்கிணைத்து, இந்நிகழ்ச்சியின் வாயிலாக திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 40 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இதுபோன்று சிறப்பான மருத்துவ சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி மக்களின் நலன் காக்கின்ற அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் மற்றும் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மருத்துவம் மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு பிரிவு கட்டிடமும், இது தவிர ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடமும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் முத்தனேந்தல் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடமும், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சிவகங்கை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் செஞ்சை - நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் முத்துப்பட்டிணம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தேவகோட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மாரநாடு, விராமதி, புளியால் ஆகியவைகளில் தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இது தவிர தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 6 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவு கட்டிடம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையம் ஆகிய மருத்துவ சேவைகள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.
மேலும், தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருதில் தமிழகம் இதுவரை 478 விருதுகள் பெற்றுள்ளது. அதில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவனை, எம்.சூரக்குடி ஆரம்ப சுகாதார நிலையம்,எம்.புதுப்பட்டி சமுதாய சுகாதார நிலையம் ஆகிய மூன்றும் மேற்கண்ட விருதினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மகப்பேறு அறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழில்
தமிழகம் இதுவரை 77 சான்றிதழ்கள் பெற்றுள்ளது. அதில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய இரண்டும் சான்றிதழ்களை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழக முதலமைச்சர் , தமிழக முழுவதும் 708 நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பின்படி, தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 6.6.2023 அன்று, சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் காரைக்குடி நகராட்சியில் 2-ம், தேவகோட்டை 1-ம், சிவகங்கையில் 1-ம் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
மேலும், தமிழகம் முழுவதும் ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலும், சங்கராபுரம் ஊரக ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் முதல் சேவையில் 1,84,093 பயனாளிகளும் தொடர் சேவையில் 4,39,104 பயனாளிகளும் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஜூன் 27ஆம் தேதி இதயம் காப்போம் என்ற திட்டமும் புதிதாக தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் மாரடைப்புக்கான அறிகுறி இருந்தால், தங்களது பகுதிக்கு அருகிலேயேவுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் பயன்பெறும் பொருட்டு 3 வகையிலான 14 மாத்திரைகளை உள்ளடக்கிய பெட்டகங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு பொது மக்களின் நலன் காக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.அதனடிப்படையில் தற்சமயம் வரை 1,810 நபர்கள் இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் பயன்பெற்றுள்ளனர். இதேபோன்று பாம்பு கடி மற்றும் நாய் கடி ஆகியவைகளுக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொது மக்கள் கருத்தில் கொண்டு தரமான மருத்துவ சேவைகளை தங்களது இருப்பிடத்தின் அருகிலேயே பெறுவதற்கு அரசால் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொது மக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ கட்டமைப்புக்களும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் பொது மக்களின் கூடுதல் மருத்துவ கட்டமைப்புக்களை பெறுவதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாயிலாக கோரிக்கைகளும் அளிக்கப்பட்டு, அக்கோரிக்ககைகளின் மீது உடன் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்மலை அரசு சமுதாய நல நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், மல்லாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆய்வக கூடுதல் கட்டிடம் மற்றும் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூவந்தி துணை செவிலியர் மற்றும் தாதியர் பயிற்சி பள்ளியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கூடுதல் விடுதி கட்டிடம்,
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முனைவென்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்பு கட்டிடம் என மொத்தம் 4 முடிவுற்ற பணிகள் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் இந்நிகழ்ச்சியின் வாயிலாக பொது மக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி, உயிர் காக்கும் மருத்துவ சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் , 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களையும், 10 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும் மற்றும் 10 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்று உறுப்பினர் மாங்குடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், ஆவின் பால்வள தலைவர் சேங்கைமாறன், ஒன்றிய குழு உறுப்பினர் கலைச்செல்வி, பிரான்மலை ஊராட்சி மன்றத்தலைவர் ராமசுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறையை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.