இரணியல் அருகே குருந்தன்கோடு யூனியனுக்கு உட்பட்ட கட்டிமாங்கோடு ஊராட்சி காரங்காடு வெட்டுவிளை சாலையை கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி இந்த சாலை ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு சல்லி பரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் சாலை பணிக்காக டிப்பர் லாரியில் சல்லி கொண்டுவரப்பட்டது . லாரியை விரிகோடு பகுதியை சேர்ந்த டிரைவர் சஜின் ஓட்டினார். தொடர்ந்து அவர் லாரியில் இருந்த சல்லியை அப்பகுதியில் இறக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் தொட்டி உயர் மின் அழுத்த கம்பியில் உரசி லாரியில் மின்சாரம் பாய்ந்தது. டிரைவர் உடம்பில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்தில் பலியானார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் இரணியில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம வந்த போலீசார் சஜினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.