தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

Share others

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆசாரிப்பள்ளம் சாலை பகுதியில் உள்ள கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு மேற்கொள்ளும் பணியினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முழுவதும் பள்ளி வாகனங்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா என ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் என 2 வட்டார போக்குவரத்து அலுவலங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்திற்கு கீழ் உள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 109 பள்ளிகளில் 402 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 22 பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்து உள்ளது. அதன்படி 204 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றில் அவசரகால பாதை உள்ளதா தீயணைப்பு கருவி உள்ளதா படிக்கட்டின் உயரம் அரசு விதிமுறைக்கு உட்பட்டு உள்ளதா, முதலுதவி சிகிச்சை பெட்டி உள்ளதா வாகனங்களின் முன்பக்கம் மற்றும் பின்பக்கங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா, வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பள்ளி வாகனங்களில் முறையாக கடைபிடிக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் 24 வாகனங்கள் சீரமைப்புக்காக திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. 4 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பள்ளி வாகனங்களில் குழந்தைகளை பத்திரமாக ஏற்றி செல்ல வேண்டும். வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த கூடாது. சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஓட்டுநர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும். சீட் பெல்ட் போட்டு வாகனம் ஓட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வின்போது ஏதாவது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் 15 நாட்களுக்குள் சரி செய்து அனுமதி பெற்ற பிறகு தான் வாகனங்களை இயக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களால், வாகனங்களில் தீ அபாயம் ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்றும், தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும் ஓட்டுநர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
நடைபெற்ற ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, வாகன ஆய்வாளர்கள் எஸ்.சக்திவேல், க.சக்திவேல், துறை அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள், வாகன ஓட்டுநர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *