
2023ஆம் ஆண்டிற்கு “தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன –
மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தகவல்.
தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் முகமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு “தமிழ்ச்செம்மல்” விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. “தமிழ்ச் செம்மல்” விருதாளர்களுக்கு ரூ.25000 ரொக்கப் பரிசுத்தொகையும் தகுதியுரையும் வழங்கப்பெற்று வருகிறது. இவ்வகையில் 2023ஆம் ஆண்டிற்கு “தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள், விருதுக்கான விண்ணப்பத்தினை உரியவாறு பூர்த்தி செய்து, தன்விவரக்குறிப்பு, நூல்கள் / கட்டுரைகள் ஏதேனும் வெளியிடப்பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் ஒரு படி இணைக்கப்பட வேண்டும்), தமிழ்ச் சங்கங்கள் / தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தக்க பணிகள், தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக்கடிதம் / மாவட்டத்தில் செயற்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் இரண்டு கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்களுடன், ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கானச் சான்றுகளையும் இணைத்து சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 10.10.2023ஆம் நாளுக்குள் கிடைக்கப்பெறும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04575-241487 தொலைபேசி எண்ணிலோ அல்லது 9952280798 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் அல்லது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித்., தெரிவித்துள்ளார்.