வில்லுக்குறி அருகே பள்ளி மாணவனை மழை வெள்ளம் இழுத்துச் சென்ற விவகாரத்தில் மாணவனின் முழு மருத்துவச் செலவை அரசு ஏற்பதுடன், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வில்லுக்குறியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17ம் தேதி பெய்த கனமழையில் வில்லுக்குறியில் தாயுடன் வந்த பள்ளி மாணவன் மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை அடிமடையில் சிக்கிக்கொண்ட மாணவன் கடுமையான போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து மார்க்ஸ்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலைக் கட்சி சார்பில் வில்லுக்குறி குருசடி ஜங்ஷனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வில்லுக்குறி பேரூர் செயலாளர் மிக்கேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் செல்வராஜ், அன்ஜூனன், ஜோசப்ராஜ் , கணபதி, ஜஸ்டின் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; 2-ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு கொடூரமான நிகழ்வு நடந்து உள்ளது. அதிர்ஷ்ட வசமாக மாணவன் ஆஷிக் உயிர் தப்பி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். மாணவனின் இடது கண் சிவந்து பார்வை குறைந்து உள்ளது. ஞாபக சக்தியை இழந்த நிலையில் சிகிச்சை பெறுகிறான். தலையில் பலத்த காயத்துடன் வீக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஸ்கேன் எடுத்து அடுத்த கட்ட சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளது. மாணவனின் தற்போதைய சிகிச்சை, தொடர் சிகிச்சை என அனைத்து செலவுகளையும் அரசு ஏற்க வேண்டும். மாணவனுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வெள்ளச்சிவிளையில் இருந்து வில்லுக்குறி ஜங்ஷன் வரை உள்ள மழைநீர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
கொட்டும் மழையில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை தலைவர் ஜாண்பேட்ரிக், ஆலோசகர் சசி, வில்லுக்குறி பேரூர் காங்கிரஸ் தலைவர் பிரகாஷ்தாஸ், நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஸ்டாலின், சிபிஐஎம்எல் நிர்வாகிகள் பசுபதி, ரேவதி, தங்கலெட்சுமி, மாடத்தட்டுவிளை முன்னாள் பங்குப்பேரவை துணைத் தலைவர் பால் ததேயுஸ், மாடத்தட்டுவிளை சமூக சேவகர்கள் ரெக்சிலின் ராஜகுமார், ஆல்பிரட் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.