![](https://kumarikural.in/wp-content/uploads/2024/12/IMG-20241217-WA0022.jpg)
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மதிய உணவாக தயிர் சாதம் வழங்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியாளருக்கு மனு கொடுத்ததாக பாசனத் துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் மனுக்கள் பெறுவது, விவாதம் நடத்துவது, கடந்த மாத பதில்கள் வாசித்து – விவாதிப்பது, என காலை 10:30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை கூட்டம் நடைபெறுவதால் வயதான விவசாயிகள் முதல் அனைவரும் பசியால் வாடக்கூடிய நிலை இருந்து வருகிறது.
ஆகவே 19-12-2024 வியாழக்கிழமை நடைபெற உள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோதையாறு பாசன திட்ட குழு சார்பாக அனைத்து விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் உட்பட அனைவருக்கும் மதிய உணவாக தயிர்சாதம் வழங்கலாம் என்று தீர்மானித்து உள்ளோம்.
ஆகவே அதற்கான அனுமதியை வழங்குமாறும் உணவு இடைவேளையாக மதியம் 1 மணி முதல் 1:30 மணி வரை இடைவெளி விடுமாறும் அதற்குரிய தொடர் நடவடிக்கைகள் எடுக்குமாறும் வேண்டப்படுகிறது.
மேலும் அனுமதி வழங்கப்படுவது சம்பந்தமான எழுத்துப்பூர்வ உத்தரவினை எங்களுக்கு தெரிவிக்குமாறும் வேண்டுகிறோம் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக பாசனத் துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தெரிவித்தார்.