சிஆர்பிஎப் -ல் இருந்து ஓய்வு பெற்ற மூலச்சல்விளை பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் குமார் (59) என்பவர், சம்பவத்தன்று செருப்பங்கோடு–காட்டுவிளை சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தபோது, செருப்பங்கோடு அருகே பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அவரை தாக்கி கீழே தள்ளி, கழுத்தில் அணிந்து இருந்த சுமார் ஒன்பதரை (9½ ) சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில், இரணியல் காவல் நிலையத்தில் குற்ற வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷூல் நாகர் உத்தரவிட்டார். அதன்படி குளச்சல் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காந்தி மேற்பார்வையில், இரணியல் காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான தனிப்படையினர் விரிவான விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், சம்பவம் நடைபெற்ற ஆறு மணி நேரத்திற்குள் பிராந்தன்சேரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் அருணாச்சலம் (35) மற்றும் திங்கள்நகர் நடுத்தெரு பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரின் மகன் அனீஸ் (31) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி செயின் பறிப்பு சம்பவத்தை தாங்களே செய்ததாக ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட தங்கச் செயின் மீட்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவான நடவடிக்கை மூலம் ஆறு மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய இரணியல் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நாகர் பாராட்டினார். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நாகர் எச்சரித்து உள்ளார்.