கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா துறையின் சார்பில் குமரி திருவிழா 5 நாட்கள் நடைபெற உள்ளது எனமாவட்ட ஆட்சியாளர் பிரதாப் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் மாபெரும் குமரி திருவிழா நிகழ்ச்சியானது வருகின்ற 26.6.2026 முதல் 30.6.2026 வரை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா குறித்து மாவட்ட ஆட்சியாளர் பிரதாப், தெரிவிக்கையில்:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும், மீண்டும் சுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலா தளங்களை கண்டுகளிக்கும் வகையிலும் கன்னியாகுமரி, முட்டம், லெமூர் கடற்கரை, பேச்சிப்பாறை, மாத்தூர் தொட்டிபாலம், திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை சுற்றுலா துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்ஒருபகுதியாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் குமரி திருவிழா என்ற மையப்பொருளை கொண்டு, குறிப்பிட்ட 5 நாட்களும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் பல்வேறு கலை வடிவங்கள், திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் வகயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அயல் மாநில மற்றும் உள்மாநில கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு கலை வடிவங்களில் குமரி திருவிழா நடைபெற உள்ளது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுற்றுலா துறை இணைந்து வெகுவிமர்சையாக பெருவிழா நம்ம குமரி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. நடைபெற உள்ள குமரி திருவிழாவில் அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கலைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் குமரி திருவிழாவினை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் தெரிவித்தார்.
முன்னதாக குமரி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் சிவபுகழ், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்