31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கான 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகள், நேற்றையதினம் (19.4.2024) நிறைவுற்றுள்ளதையொட்டி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரி, வாக்கு எண்ணிக்கை மையத்தில், அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, சீல் இடும் பணிகள், இன்றைய தினம் (20.4.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் ஹரிஸ் ஆகியோர் தலைமையில், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, தமிழகத்திற்கு ஒரே கட்டமாக நேற்றையதினம் (19.4.2024) பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 சிறப்பாக நடைபெற்று உள்ளது.
அதனடிப்படையில், 31 சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளான புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1873 வாக்குச்சாவடி மையங்களில், பாராளுமன்ற பொது தேர்தல் சிறப்பாக நடைபெற்றது. அதில் 181- திருமயம் சட்டமன்ற தொகுதியில் 65.87 சதவீதம் வாக்குப்பதிவும், 182- ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 73.57 சதவீதம் வாக்குப்பதிவும், 184- காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 60.94 சதவீதம் வாக்குப்பதிவும், 185- திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 63.36 சதவீதம் வாக்குப்பதிவும், 186- சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 60.95 சதவீதம் வாக்குப்பதிவும், 187-மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 64.01 சதவீதம் வாக்குப்பதிவும் என மொத்தம் 64.25 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 8,02,283 ஆண் வாக்காளர்களும், 8,31,511 பெண் வாக்காளர்களும், 63 இதர வாக்காளர்களும் என மொத்த வாக்காளர்களான 16,33,857 வாக்காளர்களில், 4,82,411 ஆண் வாக்காளர்களும், 5,67,254 பெண் வாக்காளர்களும், 10 இதர வாக்காளர்களும் என 10,49,675 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
அதன்படி மேற்கண்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரும் பணிகள் நிறைவு பெற்று, அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கென ஏற்படுத்தப்பட்டு உள்ள பாதுகாப்பு வைப்பறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சீல் இடும் பணிகளும், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர்களின் முன்னிலையில் நிறைவு பெற்றுள்ளது.
மேலும், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில், தமிழ்நாடு சிறப்பு காவல் துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறையினர் என மொத்தம் 300 காவல் துறை சார்ந்தோர், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றிடும் வகையில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இது மட்டுமன்றி, கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ள தனி அறையில், அனுமதி பெறபட்டு உள்ள வேட்பாளர்களின் முகவர்கள், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொலைகாட்சிகளின் வாயிலாக, கண்காணிக்க தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது தவிர, மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பொது பார்வையாளர் ஆகியோர்களால் நேரடியாகவும் அவ்வப்போது கண்காணிப்பு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
31- சிவகங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவினை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்கள், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் ஆகியோர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் உட்பட பலர் உடனிருந்தனர்.