குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாற்றுவோம் – மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயில் நுழைவாயில் பகுதியில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தொடங்கி வைத்து தெரிவிக்கையில்-
சர்வதேச நெகிழி பையில்லா தினம் இன்று உலகம் முழுவதும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் குப்பையில்லா தமிழ்நாட்டினை உருவாக்கிட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொண்டும், நெகிழி பொருட்கள் முற்றிலும் அகற்றிடும் வகையில் சீரிய முயற்சிகளை மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக பால்வளத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக காய்கறி சந்தைகள், மீன்சந்தைகள், வணிகவளாகங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மின்சாரம், உயிரி வாயுக்கள், உயிரி உரம் போன்றவற்றை தயாரித்து, பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, செயல்முறைப்படுத்த வழிவகை மேற்கொண்டு வருகிறது. மேலும் நீர்நிலைகள், திருக்கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களில் நெகிழி குப்பைகளை அகற்றி சுகாதாரமாக பேணிக்காத்திட வழிவகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்ஒரு பகுதியாக மாசு கட்டுபாட்டு வாரியத்தின் சார்பில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை பொதுமக்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தமால், மஞ்சப்பையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வினை இன்று சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோவில் முகப்பு வாசலின் முன் நெகிழி பையில்லா கன்னியாகுமரி மாவட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகை பலகையினை திறந்து வைத்து, பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சப்பை வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களிடையே சர்வதேச நெகிழி பையில்லா தினத்தை முன்னிட்டு ஒரு முறை தூக்கி எறியும் பிளாஸ்டிக் (நெகிழி)- க்கு மாற்றாக மஞ்சப்பையை பயன்படுத்துவதன் பயன்கள் குறித்து விளக்கி கூறினார். மேலும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும், மஞ்சப்பைகளை பயன்படுத்துவதன் அவசியம் குறித்த உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி, குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாரதி செந்தில், சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் அனுசுயா, பள்ளி தலைமையாசிரியர் கண்ணன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி பொறியாளர், செயல் அலுவலர், பணியாளர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.