
சங்குதுறை கடற்கரையில் மாணவ மாணவியர்கள் கோலம் மற்றும் வண்ணம் பூசி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பார்வையிட்டு ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், சங்குதுறை கடற்கரையில் மகளிர் திட்டத்தின் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்ட கோலம் மற்றும் வண்ணம் பூசும் நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில் –
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்குரிமை பெற்ற அனைவரும் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமாக சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் கல்லூரி மாணவ மாணவியர்கள், சுய உதவிக்குழுக்கள், தன்னார்வலர்கள், துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், மலை வாழ் பழங்குடியின மக்கள் உள்ளிட்டவர்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முதல் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகன பிரச்சாரங்கள், தேர்தல் விழிப்புணர்வு பதாகைகள், சுவர் ஓவியங்கள், தேர்தல் தொடர்பான பல்வேறு போட்டிகள், மணல் சிற்பங்கள், கிராமிய கலைகள், பரமபதம், ரங்கோலி, கோலப்போட்டி, கபடி, இசை நாற்காலி போட்டி உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் கன்னியாகுமரி மாவட்டம் கல்வி, இயற்கை வளம் உள்ளிட்டவற்றில் பிற மாவட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்வது போல் வாக்களிப்பதிலும் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும் என்ற ஒற்றை நோக்கே ஆகும்.

அந்த வகையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்குதுறை கடற்கரையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் சுய உதவி குழுக்கள் கோலம் வரைந்தும் வண்ணம் பூசியும் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பள்ளம்துறை பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ள மீனவர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று மறவாது தங்களுடைய வாக்குக்களை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
வாக்குரிமை பெற்ற அனைவரும் வரும் 23-ம் தேதியன்று மறவாது வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து நமது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதோடு கன்னியாகுமரி மாவட்டம் 100 சதவீதம் வாக்களித்த மாவட்டமாக திகழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றுமு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மகளிர் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், உதவி திட்ட இயக்குநர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
