கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது –
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.4.2026 அன்று நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,20,338 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததைத் தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வாக்குசதவீதம் குறைந்த சட்டமன்ற தொகுதிகளில் அதிகப்படியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு, அனைவருக்கும் வாக்காளர் உறுதிமொழி இயக்க கியூ ஆர் கோடு உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் பங்கு கொள்ள அனைவரும், கியூ ஆர் குறியை ஸ்கேன் செய்து உங்கள் பெயர், தொகுதி, வயது, தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்யவும். அடுத்து, வாக்காளர் உறுதிமொழியை ஏற்று பதிவு செய்ய வேண்டும். பின்னர் டிக் (✅) குறியை கிளிக் செய்யவும். பின்னர்,வாக்கு மையிடும் இடது கையின் ஆள்காட்டி விரலை உயர்த்தியபடி செல்பி எடுத்து பதிவு செய்ய வேண்டும். இதன் வாயிலாக நீங்கள் வாக்குப்பதிவு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். இந்த உறுதிமொழியினை எடுத்தவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளரிடம் இருந்து உறுதிமொழி சான்றிதழ் பெறுவீர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 லட்சம் வாக்காளர்கள் 12.4.2026 க்கு முன் உறுதிமொழி ஏற்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே வாக்காளர் பெருமக்கள் அனைவரும் இந்த குறியீடினை பயன்படுத்தி உறுதிமொழியினை ஏற்று மாவட்டத்தின் இலக்கினை எட்ட அனைவரும் இதில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
வாக்காளர் உறுதிமொழி
