வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள்

Share others

கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பொதுபார்வையாளர்கள் மற்றும் கன்னியாகுமரி       மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்   மாவட்ட ஆட்சியாளர்                                                அழகுமீனா  ஆகியோர் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தலோசனை செய்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற ஏப்ரல் மாதம் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன்ஒருபகுதியாககன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில்  கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா  தலைமையில்  மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலையில்  நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் அபுபக்கர் சித்திக், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் பிரியங்கா பாசு இங்டி,  விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் ஓம் பிரகாஷ் ராய்,  கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் சுபாஸ்ரீ நந்தா, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் மனிஷா சென்டியா, குளச்சல் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் ராம்டின்லியானி ஆகியோர்  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிகள் மற்றும் வேட்பாளர் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவிக்கையில்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் 15.3.2026 அன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 229, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 230, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 231, குளச்சல் சட்டமன்ற தொகுதி, 232, பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதி, 233, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 234, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், தேர்தல் ஒரே கட்டமாக 23.4.2026 அன்று நடத்தப்பட உள்ளது. இதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடைபெற்று வருகிறது.
229, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 14 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும், 230, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 20 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும், 231, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும், 232, பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 11 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும், 233, விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 14 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும்,  234, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் என மொத்தம் 85 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 7,55,254 ஆண் வாக்காளர்களும், 7,64,958 பெண் வாக்காளர்களும், 126 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 15,20,338 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளார்கள். வாக்களிப்பதற்காக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 363 வாக்குச்சாவடி மையங்களும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 322 வாக்குச்சாவடி மையங்களும், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 316 வாக்குச்சாவடி மையங்களும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 312 வாக்குச்சாவடி மையங்களும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குச்சாவடி மையங்களும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1914 வாக்குச்சாவடி மையங்கள்  658 அமைவிடங்களில் உள்ளது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 36  பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 18 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 15 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 23 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 10 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 35 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 137 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள்  36 அமைவிடங்களில் உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியல் அச்சிடும் பணி முடிவுற்று வேட்பாளர்களுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சிகளுக்கு 1 பிரதியும், அங்கீகரிக்கபட்ட மாநில தேசிய கட்சிகளின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 1 பிரதியும்  வழங்கப்படும். வாக்காளர் தகவல் சீட்டு 12.4.2026 முதல் 18.4.2026 அன்று மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால் விடுதலின்றி,  ஒவ்வொரு வாக்காளர்களின் வீடுகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது. எக்காரணம் கொண்டும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் முகவர்களிடம் வழங்கப்படமாட்டாது.
அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்கள் பிரச்சார கூட்டங்கள், ஊர்வலங்கள், பிரச்சார வாகனங்கள் மற்றும் இதர அனுமதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக http://suvidha.eci.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை 444 அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியான 15.3.2026 அன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24/7 செயல்பட்டு வருகிறது. 1950 மற்றும் 1800 599 8010 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் 9944445202 எண்ணில் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 955 புகார் பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
சிவிஜில் செயலி பயன்படுத்தி புகார் அளித்தவர்களின் பெயர் வெளியிடப்படாத நிலையிலும், வேட்பாளர்களின் நடத்தை விதிமுறைகள் குறித்து எந்தவொரு நபரும் நேரடி பதிவாக புகைப்படம், வீடியோ மற்றும் ஆடியோ  அல்லது எழுத்துப்பூர்வமாக தங்களது அலைபேசி மூலமாக புகார் அளித்திடலாம். இத்தகைய புகார்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு, உடனடியாக பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நேரத்திற்குள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சிவிஜில் செயலி வாயிலாக இதுவரை பெறப்பட்ட 73 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அன்றாட செலவு குறித்த கணக்குகளை பதிவு செய்ய பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். தேர்தல் செலவினங்கள் குறித்து வழங்கப்பட்ட பதிவேட்டின் அசலினை தினந்தோறும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு  தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்களின் தேர்தல் செலவினம் ரூ.40 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து தேர்தல் செலவினங்களும் வேட்பாளர்கள் இதற்கென தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு பதிவு அலுவலர்கள் பயன்படுத்த மேஜை, நாற்காலி போன்ற உபயோகப் பொருட்கள் வாக்கு சாவடியில் அமைக்கப்பட்டு உள்ளன. குடிநீர், கழிப்பறை, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் வாக்குசாவடிகளில் அமைக்கப்பட்டு உள்ளன. வயதான மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வசதிக்காக சாய்தள அமைவிடம், சக்கர நாற்காலி மற்றும் சக்கர நாற்காலியில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களை அழைத்துச்செல்ல தன்னார்வலர்கள் ஆகிய வசதிகள் வாக்கு சாவடிகளில் அமைக்கப்பட்டு உள்ளன.
வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடியினை எளிதில் அடையாளம் காணும் வகையில் வெவ்வேறு வண்ணமிடப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிக்குள்  அலைபேசி கொண்டு செல்ல அனுமதியில்லை. வாக்களிக்கும் வாக்காளர்களின் அலைபேசிகளை பாதுகாப்பாக வைக்க எண் வடிவிலான லாக்கர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பிஆர்ஓ தொகுதி எளிதாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது வாக்குப்பதிவு நாளின் செயல்பாடுகளை குறைந்த முயற்சியுடன் முடிக்க உதவும் எளிய மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய செயலியாகும். இதன் மூலம் வாக்குப்பதிவுக் குழு வருகை நிலை. மாதிரி வாக்கெடுப்பு, வாக்குப்பதிவு தொடக்கம் , வாக்குப்பதிவு போக்கு . மற்றும் வாக்குப்பதிவு முடிவு போன்ற செயல்பாடுகளை பி-1 (22-4-2026) நாள் மற்றும் வாக்குப்பதிவு நாளில் (23-4-2026) பதிவு செய்யப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 1914 வாக்குச்சாவடிகளிலும், வாக்குச்சாவடியின் உள்புறமும், வெளிபுறமும் தனித்தனியாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாக்குச்சாவடியின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தாலும் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 24×7 பணியாளர்களால் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
வேட்பாளர்கள் தங்களது தேர்தல் முகவரால் படிவம் 10-ல் வாக்குச்சாவடி முகவர் நியமனம் செய்ய வேண்டும். இப்படிவத்துடன் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குப்பதிவு அன்று அதிகாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் முன்பாக படிவம் 10-னை அளித்து வாக்குச்சாவடி நுழைவு அனுமதி/ சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் மாற்றம் படிவம் 11-ல் வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் இருந்து பெறலாம். வாக்குச்சாவடி முகவர்கள் கட்சி அடையாளங்களை வெளிபடுத்தும் விதமாக அணியக்கூடாது. மாதிரி வாக்குப்பதிவானது சரியாக காலை 5.30 மணியளவில் நடைபெறும். வாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவுபெறும். வாக்குச்சாவடியில் மூன்று வகையான வரிசை முறைகள் கடைபிடிக்கப்படும். ஆண் வாக்காளர்கள் தனி வரிசையிலும், பெண் வாக்காளர்கள் தனி வரிசையிலும், வயதான /கர்ப்பிணி வரும் பெண்கள்/கைக்குழந்தையுடன் தாய்மார்கள்/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தனி வரிசை பராமரிக்கப்படும்.
ஒரே நேரத்தில் ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்கு அனுமதிக்கப்படுவார். ஒரு வேட்பாளருக்கு அதிகப்பட்சமாக மூன்று வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்ய முடியும். மாலை 3 மணியில் பொறுப்பில் இருக்கும் வாக்குச்சாவடி முகவர் கடைசி வரை வாக்குச்சாவடியில் இருக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிவுற்ற பின் வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடமிருந்து படிவம் 17 சி ன் நகலை கையொப்பமிட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
வாக்கு சாவடிகளில் சென்று வாக்களிக்க இயலாத 85+ வயதுடைய வாக்காளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தினால் வரையறை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆகியோர்களுக்கு வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மூலம் படிவம்-12 டி வழங்கப்பட்டு வாக்கு சாவடி வாரியாக நிரப்பட்ட படிவம்-12 டி விண்ணப்பங்கள் பெறப்பட்டு மண்டல அலுவலர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகள் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் 85 வயதிக்கு உட்பட்ட  5451 வாக்காளர்களும், 3101 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என மொத்தம் 8552 வாக்காளர்கள் தபால் வாக்களிக்க உள்ளார்கள். தபால் வாக்கினை அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  வீடுகளுக்கு சென்று பெற்றுக்கொள்ள 149 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு குழுவில் மண்டல அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர், காவலர்,  ஒளிபதிவாளர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் அல்லது முகவர்கள் இடம்பெற்று உள்ளனர்.
எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ சாதி, சமூகம், மதம் அல்லது மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடுகளை, பகைமையை உருவாக்கவோ அல்லது பதற்றத்தை ஏற்படுத்த கூடிய எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. தேவாலயங்கள், கோயில்கள், மசூதிகள் அல்லது பிற வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. சாதி, இன, மத, சமூக உணர்வுகளை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க கூடாது. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் எந்நிலையிலும் கொடுப்பது. வாக்காளர்களை மிரட்டுவது, ஆள்மாறாட்டம் செய்து வாக்களிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வாக்குச் சாவடிக்கு 100 மீட்டர் சுற்றளவில் வாக்கு சேகரிப்பது. வாக்குப்பதிவு நாளுக்கு முன்பு 48 மணி நேரத்திற்குள் பொதுக்கூட்டம் நடத்துவது, வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து தருவது தவிர்க்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு கட்சியின் ஆதரவாளர்களும் மற்ற கட்சிகள் நடத்தும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை சீர்குலைக்கவோ அல்லது தடுக்கவோ கூடாது. ஒரு அரசியல் கட்சி வெளியிடும் சுவரொட்டி அல்லது விளம்பரங்களை மற்றொரு கட்சியின் தொண்டர்கள் அகற்றக் கூடாது. வேட்பாளர் சார்பில் வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டில்  எந்த கட்சியின் சின்னமோ. கொடியோ இடம்பெறக்கூடாது.கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு அனுமதியில்லை. முன் அனுமதி பெற்று நகரும் வாகனங்களில் மற்ற வகை ஒலிபெருக்கிகளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
வேட்பாளர்கள் கேபிள் டிவி, தினசரி பத்திரிக்கை மூலமாக செய்து உள்ள விளம்பரங்கள் இதற்கு என அமைக்கப்பட்டு உள்ள  எம்சிஎம்சி குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட அனுமதியாணையின் அசலை வாகனத்தின் முன்பு கட்டாயம் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். நகல் எடுத்து பயன்படுத்தக்கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியமைக்காக 76 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் பறக்கும் படைகள் 18 எண்களும், நிலையான கண்காணிப்பு படைகள் 18 எண்களும் கொண்டு மாவட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமீறல்களில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இப்படைகள் செயல்பட்டு வருகிறது. மேற்படி பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படை குழுவினர்களால் 9.4.2026  வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.59.57 லட்சம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
22.4.2026 மற்றும் 23.4.2026 ஆகிய நாட்களில் வேட்பாளர்/தனி நபரால் வெளியிடப்படுகிற அனைத்து விளம்பரங்களும் தொலைகாட்சி மற்றும் கம்பிவட தொடரமைப்பு/கம்பிவட சேனல்களில் ஒளிபரப்பு/அச்சு ஊடகங்கள்/நாளிதழ்கள் மற்றும் பத்திரிக்கைகளில் செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவால்  சான்றளிக்கப்பட வேண்டும். மாவட்ட அளவில் இப்பணிக்கான பொறுப்பு அலுவலராக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட காணொளிகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உண்மைக்கு புறம்பாக மற்ற வேட்பாளர்களின் மரியாதையை பாதிக்கும் வகையில் சில நபர்கள் வெளியிடுகிறார்கள். சமூக ஊடகங்களை கண்காணிக்க தனிக்குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படுகிறது. இவ்வாறாக அவதூறு பரப்பும் விடியோக்கள் கண்டறியப்பட்டு மாவட்ட காவல் துறையின் சமூக ஊடகக் குழு-க்கு அனுப்பப்பட்டு  எப்ஐஆர் / சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டு பின்னர் தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்த காட்சிகள் நீக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறாக இதுவரை 2 பதிவுகள் நீக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. எனவே சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் தகவல்கள் உண்மையாக இருக்கும் நிகழ்வில் மட்டும் பகிரப்பட வேண்டும்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு தோவாளை(இ) பூதப்பாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், நாகர்கோவில் சட்டமன்ற  தொகுதிக்கு அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகத்திலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. நடைபெற உள்ள தேர்தல் நேர்மையுடன் சிறப்பாக நடைபெற நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அதனைத்தொடர்ந்து பொதுபார்வையாளர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஆகியோர் முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்டம் 6 சட்டமன்றத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி நிலைஅலுவலர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
நடைபெற்ற கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சுகிதா (பொது), ரோஷன் பேகம் (தேர்தல்),  பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா,  தபால் வாக்கு கண்காணிப்பு அலுவலர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி,  ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், எம்.சி.சி கண்காணிப்பு அலுவலர் மற்றும் இணை இயக்குநர் வேளாண்மை வாணி, தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட கருவூல அலுவலர் கிறிஸ்டி, தேர்தல் தனி வட்டாட்சியர் வினோத், வேட்பாளர்கள்,அரசியல் கட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *