இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கலந்துகொண்டு, தேர்தல் பணியில் ஈடுப்பட உள்ள அலுவலர்கள் இடையே பேசுகையில்-
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் 15.3.2026அன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 229, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 230, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 231, குளச்சல் சட்டமன்ற தொகுதி, 232,பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதி, 233, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 234, கிள்ளியூர் சட்டமன்றதொகுதி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், தேர்தல் ஒரே கட்டமாக 23.4.2026 அன்று நடத்தப்படஉள்ளது. இதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு சுங்கான்கடை செயின்ட் சேவியர் கத்தோலிக் பொறியியல் கல்லூரியிலும், பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு என்.விகே.எஸ் நிறுவனத்திலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு பம்மம் சேக்ரட் ஹார்ட் சர்வதேசப் பள்ளியிலும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு கருங்கல் பெத்லகேம் பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள் மற்றும் நிலை அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு அறைகள் போதிய வசதிகளுடன் உள்ளதா என்பதை தலைமை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், உரிய படிவங்கள் ஆகியவை முழுமையாக பெறப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு மறைப்புப்பகுதியின் உட்புறம் யாதொரு நபராலும் பார்க்க இயலாத வகையில் அமைக்க வேண்டும்.
வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியுடன் கூடிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு மற்றும் அதில் வழங்கப்பட்டு உள்ள பல்வேறு பொத்தான்கள் மற்றும் சுவிட்சுகளின் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் போது அனைத்து பொருட்களும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன என்பதை உறுதிசெய்ய வேண்டும். வாக்குப்பதிவுக் கருவி மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவி ஆகியவற்றை அந்தந்த வாக்குப் பதிவு அடைப்புப் பகுதிகளில் வைக்க வேண்டும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்குப்பதிவுக் கருவிகள் அல்லது கட்டுப்பாட்டு கருவிகள் அல்லது வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் தரையில் வைக்கப்படக்கூடாது. மேசையில் தான் வைக்க வேண்டும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீராக உள்ளன என்பதையும், வாக்குகள் ஏதும் செலுத்தப்படவில்லை என்பதையும் வேட்பாளர்களின் முகவர்களிடம் நிரூபித்துக் காட்ட வேண்டும். மாதிரி வாக்குப்பதிவில் குறைந்தது 50 வாக்குகள் செலுத்தப்பட வேண்டும். நோட்டா உட்பட ஒவ்வொரு வேட்பாளருக்கும் குறைந்தது ஒரு வாக்கு செலுத்தப்பட வேண்டும். கட்டுப்பாட்டு கருவியில் இருந்து மாதிரி வாக்குப்பதிவு முடிவுகளை நீக்கி வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியின் சீட்டு விழும் பெட்டி காலியாக உள்ளதா என்று சரிபார்த்து மாதிரி வாக்குப்பதிவு சான்றிதழைத் தயாரிக்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவிற்கு பின்னர் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியின் சீட்டு விழும் பெட்டி காலியாக இருக்க வேண்டும். வாக்குச் சாவடி முகவரும் வாக்குச்சாவடிக்குள் அங்கும் இங்கும் நடமாடுவதை தடுக்க வேண்டும் அவரவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அவர்களை அமரச் செய்ய அறிவுறுத்த வேண்டும்.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வாக்குப்பதிவைத் தொடங்க வேண்டும். வாக்குச் சாவடியில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் கேட்கும்படி உறுதிமொழிகளை உரக்கப் படித்து, உறுதிமொழியில் கையொப்பமிட்டு வாக்குச்சாவடியில் கையொப்பமிட தயாராக உள்ள வாக்குச் சாவடி முகவர்களின் கையொப்பத்தைப் பெற வேண்டும்.
வாக்குப் பதிவு நடைபெறும் போது வாக்காளர்களின் நடமாட்டத்தை உன்னிப்பாகக கண்காணிக்க வேண்டும். வாக்காளர் எவரும் வாக்களிக்காமல் சென்று விடாமல் கண்காணிக்க வேண்டும். எனவே தலைமை அலுவலர்கள் மற்றும் உங்களுக்கு கீழ் பணியாற்றும் அலுவலர்களுக்கு சரியான ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக பணியாற்றிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
இந்த பயிற்சி வகுப்புகளில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, குளச்சல் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைமதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் கலால் ஈஸ்வரநாதன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி, சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள், அலுவலர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
