பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் திட்டம் தொடங்கப்பட்டது.
விபத்தில்லா கன்னியாகுமரியை உருவாக்கும் என்ற உயரிய இலக்கை நோக்கி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சாலை பாதுகாப்பு என்பது காவல்துறையின் பொறுப்பு மட்டுமல்ல; பொதுமக்கள் இணைந்து செயல்படும் போது மட்டுமே விபத்தில்லா சமூகத்தை உருவாக்க முடியும் என்று வலியுறுத்தினார்.
தன்னார்வலர்களின் முக்கிய பணிகள்
இரவு நேரங்களில் தெளிவாக தெரியாத பேரிகேட்கள், டிவைடர்கள் போன்ற இடங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் தேவைப்படும் பகுதிகளை கண்டறிந்து தகவல் வழங்குதல்.
புதிய வேகத்தடைகள் அமைக்க வேண்டிய பகுதிகளை பரிந்துரைத்தல்.
நடைபாதை ஆக்கிரமிப்புகள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விளம்பரப் பதாகைகள் மற்றும் தவறாக நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கைக்கு உதவுதல்.
அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் இணைக்கப்பட்டு உள்ள வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்து, உடனடி நடவடிக்கைக்கு வழிவகை செய்தல்.