
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே பட்டரிவிளையில் பிறந்து தமிழகம் தழுவி ஆன்மீக அருட்பணி புரிந்த அருட்சகோதரி ஸ்கொலாஸ்டிக்கா அவர்களை இறையடியார் நிலைக்கு உயர்த்தக் கோரி பிப்ரவரி 26ம் தேதி வேலூர் மறை ஆயரிடம் பக்தர்கள் விண்ணப்பம் வழங்குகின்றனர்.
திங்கள்சந்தை அருகே முன்னாள் மாங்குழி பங்கு பட்டரிவிளையில் பிறந்து அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழைப் பெண்களுக்கு அருள் வாழ்வளித்து மறைந்து அற்புதங்கள் செய்து வரும் அருட்சகோதரி ஸ்கொலாஸ்டிக்காவை புனிதர் நிலைக்கு உயர்த்த ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது. அன்னை வசித்து வந்த அழகப்பபுரம் வீடு தற்போது சிற்றாலயமாக விளங்குகிறது. இங்கு வந்து வேண்டுபவர்களுக்கு அன்னை அற்புதங்கள் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அழகப்பபுரத்தில் நடந்த இயேசுவின் திரு இருதய உடன் உழைப்பாளர்கள் கூட்டத்தில் புனிதர் நிலைக்கான ஆயத்தப் பணிகள் பற்றி பேசப்பட்டது. இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபை முதன்மை அருட்சகோதரி அமுதா தியோஸ் தலைமை வகித்தார். அருட்சகோதரி ஆலிஸ் வரவேற்றார். உடன் உழைப்பாளர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்தனர். அன்னை ஸ்கொலாஸ்டிக்கா அவர்களின் புனிதர் பட்டத்தின் முதல் கட்டமாக இறை ஊழியர் என அறிவிக்க கோரி வரும் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி கூட்டு திருப்பலி நிறைவேற்றி வேலூர் மறைமாவட்ட ஆயருக்கு முதல் விண்ணப்பம் கொடுப்பது.
கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டு செபிக்க நண்பர்கள், உறவினர்கள் உட்பட பக்தர்களை அழைத்து செல்வது. இதற்கு முன் தயாரிப்பாக தூத்துக்குடி, கோட்டாறு, குழித்துறை மறைமாவட்ட அழகப்பபுரம், நாகர்கோவில் குருசடி, மாங்குழி, பட்டரிவிளை, முளகுமூடு, பள்ளியாடி உள்ளிட்ட அன்னை அவர்கள் பிறந்து வளர்ந்து பணிபுரிந்த பங்குகளில் திருப்பலியில் அன்னை ஸ்கொலாஸ்டிகா அவர்களின் அற்புதங்களை கூறி அதிகப்படியான மக்கள் பயனடையச் செய்ய ஆயர்களை சந்தித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவது.
பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் சந்திப்பு நடத்துவது. முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைப்பது. பக்தர்களிடம் அன்னை குறித்த தகவல்கள், குறிப்புகள் இருந்தால் தர கேட்பது. அன்னையால் அற்புதம் பெற்று நலன் அடைந்தோர் அது குறித்த சாட்சியை தெரிவிக்க கேட்பது. அழகப்பபுரத்தில் அன்னை வாழ்ந்த வீடான சிற்றாலயத்திற்கு 24 மணி நேரமும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அருட்சகோதரி லீமா நன்றி கூறினார். அருட்சகோதரி ஜாய்ஸ், அருட் சகோதரி சாந்தசீலி உட்பட உடன் உழைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.