என் மண் என் தேசம் நிகழ்ச்சி
சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்திய நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையிலும், இந்த மண்ணிற்கு வணக்கம் செலுத்தும் வகையிலும், என் மண் என் தேசம் இயக்கம் தொடங்கப்பட்டு சிறப்பாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன்படி முதல் கட்டமாக, நாடெங்கிலும் உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் வீரர்களுக்கு வணக்கம் செலுத்தியும், அனைத்து கிராம ஊராட்சிகளில் 75 மரக் கன்றுகள் நட்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதன் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுியாக தேசமெங்கும் அமுதக் கலச யாத்திரை நடைபெற்று வருகிறது. இதன்படி தேசத்தின் கிராமங்கள் தோறும், செப்டம்பர் மாதம் 30 ம் தேதி வரை, வீடுகளில் இருந்து அமுத கலசத்தில் மண் பெறப்பட்டது. கிராமங்கள் தோறும் வீடுகளில் சேகரிக்கப்பட்ட மண், அக்டோபர் மாதம் ஒன்றிய அளவில் சேகரிக்கப்பட்டு, இந்த அமுதக்கலசங்கள், தேசத்தின் தலைநகரான தில்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு கலசங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் மூலம் தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகிலே அமுதப் பூங்காவனம் அமைக்கப்படும். இந்த அமுதப் பூங்காவனம், உன்னத பாரதத்தின் மிக உன்னதமான அடையாளமாக கருதப்படும். இதன் அடுத்த பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தின் அமுத கலசம் சேர்க்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரிஅஞ்சல் கோட்டம், நேரு யுவ கேந்திரா மற்றும் விவேகானந்தா கலை கல்லூரியுடன் இணைந்து விவேகானந்தா கலை கல்லூரியின் கலை அரங்கத்தில் வைத்து கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தின் கீழ் இருக்கும் பல்வேறு கிராமங்கள் மற்றும் பேரூராட்சிகளில் இருந்து பெறப்பட்ட மண்ணை ஒரே கலசத்தில் கலந்து நிரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விவேகானந்தா கலை கல்லூரி முதல்வர் ராஜசேகர், செயலாளர் ராஜன், மற்றும் நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர் ரெங்கநாதன், கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்கள், பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.