கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்

Share others

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகிச்சிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை, மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், துவக்கி வைத்து தெரிவிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயப் பெருங்குடி மக்களின் உற்றத்தோழனாக விளங்கி வரும் கால்நடைகளின் நலன் காக்கின்ற வகையிலும், வரும் முன் காப்போம் என்ற உயரிய நோக்கிலும் மாவட்டம் முழுவதும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம், மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 240 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன் துவக்கமாக, இன்றைய தினம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகிச்சிப்பட்டி ஊராட்சியில் உள்ள சோணைப்பட்டி கிராமத்தில் இம்முகாமானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் கால்நடைகளுக்கு பயனுள்ள வகையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமானது நடைபெறவுள்ளது.

கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு மருத்துவ வசதிகளைப்பெற, பற்றாக்குறையாக உள்ள தொலைதூர கிராமங்களை தேர்வு செய்யப்பட்டு அக்கிராமங்களில், கால்நடைக்கான மருத்துவ வசதியினை அளித்திடும் நோக்குடன் இம்முகாம்களானது அரசால் நடத்தப்படுகிறது.

மேலும், இம்முகாம்களின் வாயிலாக நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கு சிகிச்சைகள், சினை பரிசோதனை, சுண்டு வாத அறுவை சிகிச்சை போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், கால்நடை மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு குழுவினரால் முகாம் நடைபெறும் இடத்திலேயே, நோயுற்ற கால்நடைகளிடமிருந்து ஆய்வுக்கான மாதிரி பொருட்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு துல்லியமான சிகிச்சை உடனடியாக வழங்கப்படுகிறது. மேலும், பல்வேறு வகையான கால்நடைகளை, நோய் வரும் முன் காத்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்த விளக்க கண்காட்சியும் இம்முகாம்களில் நடத்தப்பட்டு கால்நடை வளர்போருக்கு அவைகள் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இம்முகாம்கள் தொலைதூர கிராமங்களில் நடத்தப்படுவதால், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகள், மாவட்டத்தின் கடைக்கோடி கிராமப் பகுதிகளிலும் இருக்கின்ற கால்நடைகளுக்கு கிடைக்கப்பெறுகின்றன. நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு நடைமுறைகள் தொடர்பான அறிவை பகிர்வதன் மூலம் கால்நடைகளின் கருத்தரிக்கும் திறன் மற்றும் கன்று ஈனும் விகிதத்தை கணிசமாக மேம்படுத்திடவும், கிராம பொருளாதாரத்தை உயர்த்திடவும் வழிவகை செய்கிறது. இதனால் கால்நடை வளர்ப்போர் ஊக்குவிக்கப்பட்டு கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதற்கும் வழிவகை ஏற்படுகிறது.

மேலும், இப்பகுதியில் கால்நடை வளர்ப்போர்கள் அசோலா தீவன உற்பத்தி செய்து பயன்பெற வேண்டும். தற்போது உள்ள பால் உற்பத்தியினை இன்னும் கூடுதலாக பெருக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பயன்பெற வேண்டும்.

இதுபோன்று, மாவட்டதின் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் நடைபெறும், சிறப்பு  கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு  முகாமினை, விவசாயப் பெருமக்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் கால்நடைகளை முறையாக பேணிக்காத்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர்         ஆஷா அஜித், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்,  சகால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் சிறந்த கிடேரிக்கன்றுகளை வளர்த்த 3 விவசாயிகளுக்கு பரிசுப்பொருட்களையும், 3 விவசாயிகளுக்கு சிறந்த கால்நடை மேலாண்மைக்கான பரிசு மற்றும் சான்றிதழ்களையும்  மாவட்ட ஆட்சியாளர்  வழங்கினார்.   

முன்னதாக, கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த விளக்க கண்காட்சி மற்றும் கால்நடைக்கான முகாமினை, மாவட்ட ஆட்சியாளர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்  மஞ்சுளா பாலசந்தர்,  கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) .கார்த்திகேயன், உதவி இயக்குநர் (சிவகங்கை) சரவணன், கால்நடை மருத்துவர் முகமதுகான்,  கால்நடை உதவி மருத்துவர் கோபி, ஊராட்சி மன்றத்தலைவர்  பிரவீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *