கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் திங்கள்நகர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் , மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , திறந்து வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிற்கு உட்பட்ட அனைத்து தரப்பட்ட விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதோடு, அவர்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப்பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் இயற்கையின் அருங்கொடைகள் பெற்ற மாவட்டமாகும். இங்கு நெல் விவசாயம் மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. நெல் விவசாயம் படிப்படியாக பல்வேறு காரணங்களால் குறைந்து வருகிறது. அதனால் விவசாய பெருமக்கள் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறார்கள். தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்வதில் அரசு தரப்பில் பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாகவும் அதனால் கொள்முதல் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், அதனை தனியார் வாங்கி வைத்து விற்பதால், விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பது இல்லை போன்ற பல்வேறு குறைபாடுகள் இருந்தன. நம்முடைய மாவட்ட ஆட்சியாளர் விவசாய சங்கங்களுடன் கலந்து பேசி அனைத்து விவசாயிகளிடம் இருந்தும் நெல் கொள்முதல் செய்ய செய்வதற்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் நலனில் அக்கறைக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இன்று திங்கள் நகர் பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், வாயிலாக மத்திய மாநில அரசுகளின் நேரடி நெல்கொள்முதல் திட்டத்தின் கீழ் கே.எம்.எஸ் 2024-2025 ஆம் ஆண்டு கன்னிப்பூ பருவத்திற்கு கன்னியாகுமரி மண்டலத்தில் புத்தளம், தேரூர், குருந்தன்கோடு இருப்பு (திங்கள்நகர்), கடுக்கரை, தாழக்குடி, திட்டுவிளை, செண்பகராமன்புதூர், கிருஷ்ணன்கோவில், சிறமடம் ஆகிய 10 நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. மேலும் கடந்த 2023-2024 ஆம் ஆண்டு கன்னிப்பூ பருவத்தில் 33 விவசாயிகளிடம் இருந்து 143 மெ.டன் நெல்லும், கும்மப்பூ கொள்முதல் பருவத்தில் 998 விவசாயிகளிடம் இருந்து 3,910 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் முறையே ரூ.32,31,702 மற்றும் ரூ.8,84,97,168 என ஆக மொத்தம் சுமார் ரூ.9.18 கோடி செலுத்தப்பட்டு உள்ளது.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு தமிழ்நாடு அரசால் சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு விலை ரூ.2,320, ஊக்கத்தொகை ரூ.130 என ஆக மொத்தம் ரூ.2,450 ஆகவும், பொதுரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு விலை ரூ.2,300, ஊக்கத்தொகை ரூ.105 ஆக மொத்தம் ரூ.2,405 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நடப்பு 2024-2025 கொள்முதல் பருவத்தில் வேளாண்மை துறையினருடன் இணைந்து 10,000 மெ.டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விவசாய பெருங்குடி மக்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் உரிய முறையில் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.
அதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, முன்னிலையில் வேளாண்மைத்துறையின் சார்பில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆடாதொடா, நெச்சி கன்றுகள், தன்னகர நெல் விதைகள், பாரம்பரிய நெல் ரகங்கள், கொட்டார சம்பா, நெல் விதைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் துணை ஆட்சியர்/மண்டல மேலாளர் செல்லப்பாண்டியன், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) ஆல்பர்ட் ராபின்சன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெங்கின் பிரபாகர், துணை இயக்குநர் (வேளாண்மை) வாணி, திங்கள்நகர் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சுமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கண்காணிப்பாளர் காசிநாதன், இலட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் பி.எஸ்.சந்திரா, துறை அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.