பிரதமர் நரேந்திர மோடி தில்லி திரும்பியபோது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து இஸ்ரோ குழுவினருடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து தில்லி வந்தார். தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பெங்களூரு சென்றார். பின்னர் தில்லி வந்த பிரதமரை ஜே.பி.நட்டா வரவேற்று, அவரது வெற்றிகரமான பயணம் மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் மகத்தான சாதனைகள் குறித்துப் பாராட்டினார்.
மக்களின் உற்சாக வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர், சந்திரயான் -3-ன் வெற்றிக்காக மக்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தியதற்கு தமது நன்றியைத் தெரிவித்தார். இஸ்ரோ குழுவுடனான தமது உரையாடல் குறித்துப் பேசிய பிரதமர், சந்திரயான் -3-ன் லேண்டர் தரையிறங்கிய இடம் இனி சிவ சக்தி புள்ளி என்று அழைக்கப்படும் என்று தாம் தெரிவிதத்தை சுட்டிக்காட்டினார். சிவ சக்தி என்பது இமயமலை மற்றும் கன்னியாகுமரி இணைப்பைக் குறிக்கிறது என்று அவர் தெரிவித்தார். இதேபோல், 2019 ஆம் ஆண்டில் சந்திரயான் 2 தனது தடங்களை விட்டுச் சென்ற இடம் இனி ‘திரங்கா’ என்று அழைக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். அந்த நேரத்திலும் ஒரு திட்டம் இருந்தது எனவும் ஆனால் சந்திரயான்-2 விண்கலம் முழுமையாக வெற்றி பெற்ற பிறகே அந்தப் புள்ளிக்கு பெயர் சூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். “ஒவ்வொரு சவாலையும் சமாளிக்க திரங்கா எனப்படும் மூவர்ணக் கொடி பலம் அளிக்கிறது என்று பிரதமர் கூறினார். ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாட முடிவு செய்திருப்பது குறித்தும் அவர் தெரிவித்தார். தமது பயணத்தின் போது உலக சமூகம் இந்தியாவுக்கு அளித்த வாழ்த்துக்களையும், வாழ்த்துச் செய்திகளையும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியா தமது சாதனைகள் மற்றும் வெற்றிகளின் அடிப்படையில் ஒரு புதிய தாக்கத்தை உருவாக்கி வருவதாகவும், உலகம் இதைக் கவனித்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.
கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு இந்தியப் பிரதமர் கிரேக்கத்துக்குச் சென்றதைக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, கிரேக்கத்தில் உள்ள இந்தியா மீதான அன்பையும் மரியாதையையும் எடுத்துரைத்தார். ஒரு வகையில் கிரீஸ் ஐரோப்பாவுக்கான இந்தியாவின் நுழைவாயிலாக மாறும் என்றும் இந்திய- ஐரோப்பிய யூனியன் உறவுகளுக்கு ஒரு வலுவான இணைப்பாக கிரீஸ் இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
அறிவியலில் இளைஞர்களின் ஈடுபாட்டை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். எனவே, விண்வெளி அறிவியலை நல்லாட்சிக்கும், சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். சேவை வழங்கல், வெளிப்படைத்தன்மை மற்றும் முழுமைத்தன்மை ஆகியவற்றில் விண்வெளி அறிவியலைப் பயன்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதில் அரசுத் துறைகளைப் பயன்படுத்துவதற்கான தமது முயற்சிகளை அவர் மீண்டும் எடுத்துரைத்தார். இதற்காக வரும் நாட்களில் ஹேக்கத்தான்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
21-ம் நூற்றாண்டு, தொழில்நுட்பம் சார்ந்தது என்று பிரதமர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வழியில் இன்னும் உறுதியாகச் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார். புதிய தலைமுறையினரிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க, சந்திரயான் வெற்றியால் ஏற்பட்ட உற்சாகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இதற்காக செப்டம்பர் 1ம் தேதி முதல் மைகவ் தளத்தில் விநாடி வினாப் போட்டி நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார். புதிய தேசியக் கல்விக் கொள்கையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
ஜி-20 உச்சிமாநாடு, முழு தேசத்துக்குமான ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்ற பிரதமர், ஆனால் அதிகபட்ச பொறுப்பு தில்லி மீது விழுகிறது என்று கூறினார். தேசத்தின் கொடியை உயரத்தில் பறக்க வைத்து கெளரவிக்கும் வாய்ப்பைப் பெறும் அதிர்ஷ்டம் தில்லிக்கு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்தியாவின் விருந்தோம்பலைக் காட்ட இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம் என்பதால் தில்லி, ‘அதிதி தேவோ பவ’ என்ற விருந்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “செப்டம்பர் 5 முதல் 15 வரை நிறைய நிகழ்ச்சிகள் இருக்கும் என்றும் அதனால் தில்லி மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு நான் முன்கூட்டியே மன்னிப்பு கோருகிறேன் என்றும் பிரதமர் தெரிவித்தார். ஒரு குடும்பமாக, அனைத்து பிரமுகர்களும் நமது விருந்தினர்கள் என்ற எண்ணத்துடனும் கூட்டு முயற்சிகளுடனும் ஜி 20 உச்சிமாநாட்டை பிரமாண்டமாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
வரவிருக்கும் ரக்ஷா பந்தன் மற்றும் சந்திரனை பூமித் தாயின் சகோதரராகக் கருதும் இந்திய பாரம்பரியம் குறித்துப் பேசிய பிரதமர், மகிழ்ச்சியான ரக் ஷா பந்தனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பண்டிகையின் மகிழ்ச்சி நிறைந்த உணர்வு நமது பாரம்பரியங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் என்று அவர் கூறினார். செப்டம்பர் மாதத்தில், ஜி 20 உச்சிமாநாட்டை மாபெரும் வெற்றியடையச் செய்வதன் மூலம் தில்லி மக்கள், நமது விஞ்ஞானிகளின் சாதனைகளுக்கு புதிய வலிமையைக் கொடுப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.