
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் சடையமங்கலம் மற்றும் ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.14.56 லட்சம் மதிப்பில் நிதியுதவி பெற்று சடையமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தன்தோப்பு அன்னை மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர் 20 நபர்கள் இணைந்து வானவில் ஜூட் பேக் அலகினை தொடங்கி அதன் மூலம் சணலினால் தயாரிக்கப்பட்ட பை வகைகள், பொருட்கள் வாங்குவதற்கான பல்வேறு அளவிலான பைகள், கை பைகள், பைல் வகைள் ஆகியவற்றினை உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களை உள்ளுர் அளவில் விற்பனை செய்வததோடு, முகநூல், வலையொளி உள்ளிட்டவைகளில் வெளியீட்டு பல்வேறு சிறு வணிகர்கள் மூலம் செய்யப்பட்டு மாதம் ரூ.20,000 வரை லாபம் கிடைக்கப்பெற்று வருகின்றார்கள்.
அது போன்று ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட ரோஜா இயற்கை காளான் வளர்ப்பு ஒத்த தொழில் குழுவில் 5 உறுப்பினர்கள் இணைந்து ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.16.47 லட்சம் நிதியுதவி பெற்று சிப்பி காளான் மற்றும் மில்கி காளான் உற்பத்தி செய்து வருகின்றனர். மேலும் இங்கு காளான் வளர்த்தும், இயந்திரங்கள் மூலம் வைக்கோல் காளான் கூண்டுகள் தயாரித்தும் உள்ளுர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், மாவட்டத்திற்கு உட்பட்ட கடைகளில் விற்பனை செய்வததோடு, அண்டை மாநிலமான கேரளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுயஉதவிக்குழுக்கள் தயாரிக்கப்படும் கைவினைப்பொருட்கள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்தி சுய உதவிக்குழுவினரின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் ஸ்டாட்ஆப் நிறுவனத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் பீபீஜான், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், திருநெல்வேலி மண்டல திட்ட இயக்குநர் ராகுல், திட்ட இணை அலுவலர் ஜிஜின்துரை, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர், மாவட்ட வள பயிற்றுநர், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.