ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் ஆய்வு

Share others

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளத்தில் அமைந்து உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தங்கள் வருகை பதிவினை வரவேற்பறையில் பதிவு செய்து பெறப்படும் பதிவு அட்டைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, செயல்முறை விளக்கங்கள் கேட்டறியப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தாங்கள் சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டிய பிரிவு, மருத்துவர், அங்கு செல்வதற்கான வழி உள்ளிட்டவைகளை கேட்டறியும் உதவி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நோயாளிகள் காத்திருப்போர் அறை உள்ளிட்ட பிரிவுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறியப்பட்டது.

தொடர்ந்து உயர் சிறப்பு மருத்துவ ஆலோசனை பிரிவில் நரம்பியல், சிறுநீரகம், இரைப்பை, குடல், கணையம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளித்து அவர்களுக்கான தொடர் ஆலோசனைகள் வழங்கப்படுவது குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் ரத்த மாதிரிகள் சேகரிப்பு டோக்கன் முறையில் சேகரிக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் நவீன கட்டண படுக்கை உள்நோயாளிகள் அறையில் பார்வையிட்டதோடு அதிகளவு படுக்கை வசதிகள் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வாகனங்கள் நிறுத்துவதற்கு உரிய வசதிகள் ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து தனியார் நடத்துக்கின்ற கேண்டீனில் ஆய்வு மேற்கொண்டதில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டறிந்தோடு, சமையலறை சுகாதாரமற்ற நிலையில் இருந்த தால் அதன் பொறுப்பாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட உணவு நியமன அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. அம்மா உணவகத்தில் உணவு தயாரிக்கும் கூடம், அங்கு பேணப்படும் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, தயாரிக்கப்படும் உணவு தரமானதாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கம், சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பிரிவு, ஆண்கள் மருத்துவ அறை, மதி சிறுதானிய உணவகம், கேன்சர் வார்டு, விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இங்குவரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சைகள் அளிக்கவும், நோயாளிகளின் தேவைகளை கருத்துடன் கேட்டறிந்து உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கட்டுமான விரிவாக்க பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக செயல்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் தெரிவித்தார்.

நடைபெற்ற ஆய்வின்போது, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் லியோ டேவிட், மாவட்ட உணவு நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன், கண்காணிப்பாளர் கிங்சிலி, உறைவிட மருத்துவர் விஜயலெட்சுமி, உதவி உறைவிட மருத்துவர் ரெனிமோல், உதவி பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *