கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
டாக்டர் ஸ்டாலின் மேற்கொண்டு வரும் தீவிர கண்காணிப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளின் பலனாக, ஓடும் பேருந்தில் நகை திருடிய இரு பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருவிதாங்கோடு வடலிவிளை பகுதியை சேர்ந்த ராஜமணி என்பவரின் மனைவி மரியஅஞ்சலி (66) என்பவர் அரசு பேருந்தில் பயணம் செய்தபோது, அவர் அணிந்து இருந்த சுமார் 6 பவுன் தங்கச் சங்கிலி மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதுகுறித்து திருவட்டார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் திருவட்டார் காவல்துறையினர் மேற்கொண்ட துல்லியமான விசாரணை மூலம், இந்த குற்றத்தில் தொடர்புடைய பொள்ளாச்சி கொடிக்கால் பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி ஈஸ்வரி (40) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவரின் மனைவி லெட்சுமி (27) ஆகியோரை வேர்க்கிளம்பி பகுதியில் வைத்து கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.