உலக தாய்ப்பால் வார விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரமான ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலத் துறை சார்பில் தினந்தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
உலக தாய்ப்பால் வார விழாவின் நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் லியோ டேவிட், மருத்துவக் கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் கிங்ஸ்லி ஜெப சிங், உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயலட்சுமி, துணை உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் ரெனிமோல், டாக்டர் கலைக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும், குழந்தைகள் நலத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் அருள் பிரசாத், குழந்தைகள் நலத் துறை பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், இளநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர் கல்லூரி மாணவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விழாவின் ஒரு பகுதியாக வினாடி வினா நிகழ்ச்சி, விழிப்புணர்வு நாடகம், விழிப்புணர்வு உரை மற்றும் தாய்ப்பால் குறித்த சுவரொட்டி, கண்காட்சி ஆகியவை நடந்தது. சிறப்பாக பங்கேற்றவர்களுக்கும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தாய்ப்பால் – குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான முதல் படி என்ற விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் உலக தாய்ப்பால் வார விழா சிறப்பாக நிறைவுற்றது.