நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வாக்குபதிவு 23-4-2026 அன்று ஊதியத்துடன் விடுமுறை

Share others

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது –
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் 23.4.2026 அன்று அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்குப்பதிவினை பதிவு செய்யும் வகையில் பொது விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.
அதனடிப்படையில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 பிரிவு 135B -ன்படி
வாக்குப்பதிவு நாளன்று ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்பட வேண்டும். எந்தவொரு வணிகம், தொழில், சேவை அல்லது பிற நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரும் மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நாளன்று ஊதியத்துடன் விடுமுறை பெற உரிமை உடையவர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட வணிக நிறுவனங்கள்,தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் பிற பணியிடங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வரும் 23.4.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். இந்த பிரிவின்படி வழங்கப்பட்ட விடுமுறைக்காக ஊழியரின் ஊதியத்தில் எந்த கழிவும் செய்யக்கூடாது. இந்த பிரிவின் விதிகளை மீறுபவர் ஐநூறு ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். மேலும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் உள்ள அனைத்து ஊழியர்களும் தங்கள் தொகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்குப்பதிவு செய்ய விடுமுறை வழங்க வேண்டும். இந்த விதியை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் அனைத்து தனியார் பொது நிறுவனங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டு உள்ள அறிக்கையினை வழங்குவதோடு, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பொதுமக்கள் இதுகுறித்த புகார்களை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்களின் 9750885087, 9976123193 தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *