தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் சுபஸ்ரீ நந்தா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கலந்து கொண்டு நுண்பார்வையாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: –
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் ஏப்பரல் 23ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நடைமுறைகளைத் துல்லியமாகவும், வெளிப்படையாகவும் கண்காணிக்கும் வகையில், நுண் பார்வையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 137 நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இந்த பயிற்சி முகாமில், வாக்குப்பதிவு நாளன்று நுண் பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் நடத்தப்படும் மாதிரி வாக்குப்பதிவு நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் சீல் வைக்கப்பட்ட உறையில் விரிவான அறிக்கையை நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தல் களத்தில் நுண் பார்வையாளர்களின் பங்கு மிக முக்கியமானது. எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில், மிகுந்த நடுநிலையோடும் விழிப்புணர்வோடும் பணியாற்ற வேண்டும். தேர்தல் ஆணையத்தின் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் செயலிகள் மூலம் எவ்வாறு தகவல்களைப் பரிமாறிக் கொள்வது என்பது குறித்தும், வாக்குச்சாவடியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது விதிமீறல்கள் நடந்தால் உடனடியாக பொது பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் முறை குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் நுண் பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அவர்களுடைய பணிகள் பொறுப்புகள், செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை பற்றிய விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சுகிதா (பொது), ரோஷன் பேகம் (தேர்தல்), பத்ம பிரியா (நிலம்), மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், நுண்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி
