
/
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த ஆசிரியர்களின் பங்கு முக்கியம் –
1-ஆம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கிட ஆசிரியர்கள் முன் வர வேண்டும் என
மாவட்ட ஆட்சியாளர் பிரதாப்
அறிவுறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை சரகத்திற்கு உட்பட்ட, கண்ணாட்டுவிளை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு அரசானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ஆசிரியர்களாகிய நீங்கள் முழு அர்ப்பணிப்புடன் உங்கள் ஆசிரியர் பணியை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அவர்கள் எளிதில் புரியும் வகையில் அடிப்படைக் கல்வியினை வழங்க முன்வர வேண்டும். இந்த அடிப்படை கல்விதான் மாணவ மாணவியர்களின் மேற்படிப்புக்கு மிகவும் உந்துதலாக இருக்கும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் உள்ளூரில் மட்டும் கல்வி பயிலாமல் வெளியூர்களிலும் பல்வேறு மேற்படிப்புகள் பயின்றால் தான் வாழ்வில் ஏற்றம் பெற முடியும்.
மேலும் மாணவர்கள் இயற்கையான சூழலில் கல்வி கற்கும் வகையில் பள்ளி வளாகங்கள், சுற்றுப்புற சூழல், கழிப்பறைகள், குடிநீர் வசதி, வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திட வேண்டும். ஆசிரியர்களாகிய நீங்கள் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மருத்துவம் உள்ளிட்ட மேல்படிப்புகளுக்கான முன்னுரிமை, அரசு வேலைகளில் முன்னுரிமைகள் குறித்து மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துக் கூற வேண்டும். ஒவ்வொரு மாணவர்கள் இடையே உள்ள தனித்திறமைகளை கண்டறிந்து, அந்த திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு உள்ள ஆசிரியர்கள் தற்போதைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு எந்த வகையில் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என நன்கு புரிந்து கற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாக விரைவுப் பலகையினை நன்கு பயன்படுத்திட கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் புத்தகத்தில் இடம் பெற்று உள்ள பாடங்களை கற்றுக்கொடுக்கும்போது மாணவர்கள் எளிதாக, ஆர்வமாக புரிந்து கொள்ளும் வகையில் கற்றுக் கொடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்திட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், அனைத்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டார கல்வி அலுவலர் ஜெயசிங், தலைமை ஆசிரியர்கள் ஜோஸ் பிரகாஷ் (கண்ணாட்டுவிளை அரசு தொடக்கப்பள்ளி) தமிழ்ச்செல்வி (இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி) ஆசிரியை சாரதா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்
