ஆரம்ப கல்வி தான் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என புதிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் பிரதாப்புத்தகம் வழங்கி பேச்சினார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறைக்கு பின் திறந்ததைத் தொடர்ந்து, ஒன்றாம் வகுப்பு மற்றும் பிற வகுப்புகளில் புதிதாக சேர்ந்த மாணவ மாணவியர்களை வரவேற்க்கும் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டார் பகுதியில் உள்ள கவிமணி அரசு தொடக்கப்பள்ளிக்கு மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் வருகை தந்து புதிய மாணவர்களை வரவேற்று, மாலை அணிவித்து கவுரவித்து, பாடப்புத்தகம் வழங்கி பேசுகையில்-
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு புதிய மாணவ-மாணவியர்கள் உற்சாகமாக வந்தனர்.
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் நோக்கம் ஆரம்ப கல்வியினை மாணவ மாணவியர்களுக்கு அடிப்படையிலேயே வழங்க வேண்டும் என்பது தான். இந்த திட்டம் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமக்கு ஒன்றாம் வகுப்பு முதல் மூன்று வகுப்புகளுக்கான புத்தகங்களை முழுவதுமாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். இந்த மாற்றத்தோட நோக்கம் பள்ளிக்கல்வி ஏட்டுக்கல்வியாக மட்டும் இல்லாமல், மனிதநேயமிக்க கல்வியாகவும், குழந்தை நேயமிக்க கல்வியாகவும், நம் வாழ்வியலோடு இணைந்த ஒரு கல்வியாகவும் இருக்க வேண்டும். நம்ம அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை எப்படி வந்து நம்ம கல்வியோடு பொருத்திப் பார்த்தால் மட்டும் தான் அவங்களுக்கு அந்த கல்வி சார்ந்த விஷயம் நினைவில் இருக்கும்.
குறிப்பாக முதல் முறை பள்ளி செல்வோர்களை அதாவது அங்கன்வாடியில் இருந்து முதல் முறையாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை அதிகமாக நமது அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த ஒரு வாரமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீவிரமாக பணியாற்றி வந்தனர். ஒவ்வொரு பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் தயாரித்து, வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் வழங்கி, பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வித் தரம் குறித்தும், நம்முடைய பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பெற்றோர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் விளைவாக, இந்த ஆண்டு மட்டும் முதல் வகுப்பில் கூடுதலாக 4 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். வரும் நாட்களில் இன்னும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மாணவர்கள் வரை கூடுதலாக சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த புதிய பாடத்திட்டத்தை மாணவர்கள் மத்தியில் எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்து ஆசிரியர்களுக்கு 3 நாட்களாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாணவர்களுக்கு தேவையான புத்தக பைகள், காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டு உள்ளன.
அரசுப் பள்ளிகள், எவ்விதத்திலும் தனியார் பள்ளிகளுக்கு குறைந்தவை அல்ல. சிறந்த கட்டமைப்பு வசதிகளும், தகுதியான ஆசிரியர்களும் கொண்ட கன்னியாகுமரி மாவட்ட அரசு பள்ளிகள், மாநில அளவிலான தரவரிசையில் எப்போதும் முதல் 5 இடங்களுக்குள் நீடிக்கின்றன. மேலும், கல்வியை சுமையாக கருதாமல், எதிர்காலத்திற்கான அடித்தளமாக எண்ணி மாணவர்கள் உற்சாகத்துடன் கற்க வேண்டும்.
மேலும் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால் மூடப்பட்டு உள்ள பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த பட்டியலைப் பெற்று, அவற்றைச் சீரமைத்து நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் சி.எஸ்.ஆர். நிதி மூலம் பெறப்பட்ட உதவிகள் காரணமாக தான் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆரம்ப கல்வி தான் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் பேசினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் மாணவ-மாணவிகளுக்குப் பாடப்புத்தகங்களை வழங்கி, இனிப்புகளை ஊட்டினார். மேலும் பள்ளி வகுப்பறையில் பொருத்தப்பட்டு இருந்த ஸ்மார்ட் போர்டில் முதலாம் வகுப்பு மாணவன் ஒருவனைத் தூக்கி வைத்து, தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்தை எழுத வைத்தார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராஜ், கவிமணி தேசிக விநாயகம் பள்ளி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கமலா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகன், மாவட்ட ஆட்சியரின் முதன்மை கல்வி அலுவலர் (பள்ளிக்கல்வி) சராதா, ஆசிரியர்கள் ஐயப்பன், நாகராஜன், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
பள்ளிகள் திறப்பு மாணவ மாணவிகளோடு பல நிமிடங்கள் செலவழித்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் பிரதாப்
