கன்னியாகுமரி மாவட்டத்தில் மே மாதம் 15 ம் தேதிக்குள் தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அறிவுறுத்தல்

Share others

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், அனைத்து அலுவலகங்களிலும் தமிழில் பெயர்பலகைகள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் -மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அறிவுறுத்தி உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் தொழிலாளர் துறை சார்பில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவைகளின் பெயர்பலகைகள் தமிழில் வைத்து நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அலுவலர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாட்டிற்கு உட்பட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், 1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதி 15-ன் படியும், 1958-ம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதி 42(பி)ன் படியும் உணவு நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் அமைக்கப்படுதல் வேண்டும். மேலும் 1948-ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் 113ன் படி தொழிற்சாலைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைக்கப்படுதல் வேண்டும். குறிப்பாக, வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் முதன்மையானதாகவும், பெரிதாகவும், பின்னர் ஆங்கிலத்திலும், அதன் பின்னர் இதர மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஆணையின், மேற்படி நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள், உணவு நிறுவன உரிமையாளர்களின் சங்கப்பிரதிநிதிகள், வேலையளிப்பவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த குழுவினர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளிலும் பெயர்பலகைகளில் முதலில் தமிழிலும், இரண்டாவதாக ஆங்கிலத்திலும் அடுத்து பிறமொழிகளிலும் பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்வதோடு, விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு வரும் மே மாதம் 15-ம் (15.5.2025) தேதிக்குள் 100 சதவீதம் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பதை உறுதி செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அனைத்து நிறுவனங்களில் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைத்திடுவது தொடர்பான வழிமுறைகளை கடைபிடித்திட தொடர்புடைய அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மே 15-ம் தேதிக்குப் பின்னரும் சட்ட விதிகளின்படி, தமிழில் பெயர்ப்பலகை அமைக்காத உரிமையாளர்களிடம்/ பொறுப்பான நபர்களிடம் மறு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகைகளை சட்டவிதிகளின்படி அமைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிடவும், அபராதம் செலுத்துவதை தவிர்த்திடும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.

கூட்டத்தில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பாபு, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார்> உதவி இயக்குநர்கள் ராமலிங்கம் (பேரூராட்சிகள்), சிதம்பரம் (ஊராட்சிகள்), ரெசினாள் மேரி (தமிழ்வளர்ச்சி), நகராட்சிகள் ஆணையாளர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *