மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைகிறது

Share others

ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.5 சதவீதம் வட்டி வழங்கும் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மகளிருக்கு நிதி அதிகாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு தொடங்கி உள்ள மகளிர் மதிப்பு திட்டம் பெண்களுக்கு ஒரு சிறப்பான சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் சேராத பெண்கள் உடனடியாக சேர்ந்து பயன்பெறுமாறு கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.
இந்த திட்டத்தில் பெண் குழந்தை அல்லது தனிப்பட்ட பெண்ணின் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தனிப்பட்ட முறையிலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் உரிய பாதுகாவலர் மூலமும் இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம்.
குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ரூபாய். 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்கு தொடங்கிய நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டம் முதிர்வடையும்.
இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 7.5 சதவீதம் வழங்கப்படும் . கணக்கு தொடங்கிய நாளில் இருந்து ஓராண்டு நிறைவடையும் போது 40 சதவீதம் வரை மீதி தொகையில் திரும்ப பெற அனுமதிக்கப்படும். கணக்கு வைத்திருப்பவர்கள் / பாதுகாவலர்கள் மரணமடைந்தாலோ அல்லதூ தீவிர மருத்துவ காரணங்கள் இருந்தாலும் இந்த கணக்கை முடித்து கொள்ளலாம். கணக்கு தொடங்கி ஆறு மாதங்களுக்கு பிறகு எந்த நேரத்திலும் கணக்கை முன்கூட்டியே முடித்து கொள்ளலாம். ஆனால் அவ்வாறு முடித்துக்கொள்ளும் பட்சத்தில் வட்டி விகிதம் 2 சதவீதம் குறைக்கப்படும். இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இது வரை கன்னியாகுமரி கோட்டத்திற்கு உட்பட்ட அலுவலகங்களில் இதுவரை 13000 க்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. வரும் மார்ச்-31ஆம் தேதியுடன் இந்த திட்டம் முடிவடைய உள்ளது. மேலும் மார்ச் 30 மற்றும 31 ஆகிய இரு தினங்கள் விடுமுறை என்பதால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் மார்ச்-29 தேதிக்குள் இந்த வாய்ப்பை அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்து உள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *