மண்டல மேன்மை விருதுகளில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு 47 விருதுகள்
அஞ்சல் துறையில், மதுரை மண்டல அளவில் 2025–26 ஆம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய அலுவலர்கள் மற்றும் அஞ்சல் கோட்டங்களை கவுரவிக்கும் வகையில், மண்டல மேன்மை விருதுகள் வழங்கும் விழா தென் மண்டல அஞ்சல் துறைத்தலைவர் செய்யது ரஷீத் மற்றும் மண்டல இயக்குநர் நீரஜ் தலைமையில் நடந்தது.
இந்த நிகழ்வில், கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் 2025–26 ஆம் ஆண்டில் மண்டல அளவில் தனது செயல்திறனை நிரூபித்து, பல்வேறு பிரிவுகளில் முன்னணி இடங்களை பெற்று குறிப்பிடத்தக்க சாதனையை பதிவு செய்து உள்ளது. கோட்ட அளவிலான விருதுகள் மற்றும் தனிநபர் விருதுகள் உட்பட மொத்தம் 47 விருதுகளை கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் பெற்று உள்ளது.
குறிப்பாக, வணிக மேம்பாட்டு சேவைகள் பிரிவில் பன்னாட்டு வணிக தபால் சேவை, வாடிக்கையாளர் மைய சேவைகள் மற்றும் பார்சல் பதிவு ஆகியவற்றில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் முதலிடம் பெற்று உள்ளது.
அதேபோல், அஞ்சலக சேமிப்பு வங்கி பிரிவில் அதிக அளவில் அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்குகள் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்குகள் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, முதலிடம் பெற்று உள்ளது.
மேலும், அஞ்சல் ஆயுள் காப்பீடு, புதிய வணிகச் சேகரிப்பு மற்றும் பார்சல் விநியோகம் ஆகிய பிரிவுகளிலும் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் மண்டல அளவில் முதலிடம் பெற்று பெருமை சேர்த்து உள்ளது.
செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஸ்பீடு போஸ்ட் விநியோகம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆகிய பிரிவுகளில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் இரண்டாம் இடத்தை பெற்று உள்ளது.
மக்களுக்கு தரமான சேவை, துல்லியமான செயல்பாடு, வணிக வளர்ச்சி மற்றும் அஞ்சல் சேவைகளின் விரிவாக்கம் ஆகியவற்றில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் தொடர்ந்து காட்டி வரும் அர்ப்பணிப்பு, இந்த சாதனைகளின் மூலம் வெளிப்பட்டு உள்ளது.
இந்த சாதனைகள் அனைத்தும் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் அதிகாரிகள், பணியாளர்கள், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் தொடர் ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையின் விளைவாகும் என கன்னியாகுமரி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்திய அஞ்சல் துறையின் பல்வேறு சேவைகள் மற்றும் சேமிப்புத் திட்டங்களை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தி ஆதரவு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
