குமரியை சேர்ந்த அன்னை ஸ்கொலாஸ்டிக்கா
புனிதருக்கான முதல் படியான இறை ஊழியராக அறிவிப்பு
உரோமை புனிதர்கள் பேராயம் அங்கீகரித்தது
இயேசுவின் திரு இருதய சகோதரிகள் சபையை நிறுவிய அன்னை ஸ்கொலாஸ்டிக்காவை உரோமையில் உள்ள புனிதர்கள் பேராயம் இறைஊழியராக அங்கீகரித்து, புனிதர் பட்டத்திற்கான பணிகளைத் தொடங்குவதற்கு ஆணை பிறப்பித்து உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள பட்டரிவிளையில் சவரிமுத்து, சவரியாயி தம்பதிக்கு 4வது மகளாக 1917 அக்டோபர் 15ம் தேதி பிறந்தவர் அன்னை ஸ்கொலாஸ்டிக்கா. இவர் இயேசுவின் திரு இருதய சகோதரிகள் சபையை தொடங்கி கைவிடப்பட்ட, விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட ஏழை எளிய குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குழந்தைகள், மனநிலம் குன்றியோர், புலம் பெயர்ந்தோர், நாடோடிகள், மலைவாழ் மக்கள், எய்ட்ஸ் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கு வாழ்வளித்தவர். தற்போதும் இந்த பணிகளை இந்த சபை அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.
அன்பு, கனிவு, இரக்கம், பொறுமை, மன்னிப்பு, கடவுள் நம்பிக்கை, ஏழையர்பால் காட்டிய கருணை, அமைதி போன்ற நற்குணங்களால் இன்றும் அவர் பலரின் இதயத்திலும் வாழ்கிறார். அவரை நாடுவருக்கு தொடர் நன்மைகளை வழங்கி வரும் அன்னை ஸ்கொலாஸ்டிக்கா கடந்த 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி திருத்தந்தையால் இறை ஊழியர் என அறிவிக்கப்பட்டார். உரோமையில் உள்ள புனிதர்கள் பேராயம் அவரை இறை ஊழியராக அங்கீகரித்ததுடன் புனிதர் பட்டத்திற்கான பணிகளை தொடங்குவதற்கும் ஆணை பிறப்பித்து உள்ளது.
இறை ஊழியர் எவ்வாறு?
கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வேலூர் மறை மாவட்ட ஆயர் தலைமையில் நடந்த திருப்பலியில் அன்னை ஸ்கொலாஸ்டிக்காவின் புனிதர் பட்டப்பணிகள் தொடங்குவதற்கான அனுமதி கேட்டு இயேசுவின் திரு இருதய சகோதரிகள் சபை தலைவி அருட்சகோதரி அமுதா தியோஸ், வேண்டுகையாளர் அருட்சகோதரி அகஸ்டினாள் ஆகியோர் சேர்ந்து உரிய ஆவணங்களை வேலூர் மறை மாவட்ட ஆயர் மேதகு அம்புரோஸ் பிச்சைமுத்துவிடம் சமர்ப்பித்தார்கள். அன்று முதல் மறை மாவட்ட ஆயர் மேதகு அம்ப்ரோஸ் அன்னை கொலஸ்டிக்காவின் புனித வாழ்வு அசாதாரண பண்புகள் பற்றிய உண்மைகளை அறியும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 அன்று சபை தலைமை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆயர்களுக்கும் அன்னை ஸ்கொலாஸ்டிக்காவின் புனிதரின் பட்டத்திற்கான தடையில்லா சான்றிதழ் பெற கடிதம் அனுப்பினார்.
வேலூர் மறைமாவட்ட ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து முயற்சியால் கடந்த 2025ம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி கூடிய தமிழ்நாடு ஆயர் பேரவை அன்னை ஸ்கொலாஸ்டிக்கா பற்றிய ஆய்வு மேற்கொண்டது. அதன் விளைவாக அதேமாதம் 31ம் தேதி புனிதர் பட்டத்திற்கான தடையில்லா சான்றிதழை தமிழ்நாடு ஆயர்கள் பேரவையின் தலைவரும் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயருமான மேதகு ஜார்ஜ் ஆன்றணிசாமி வழங்கினார். இதையடுத்து 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வேலூர் மறைமாவட்ட ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து உரோமை புனிதர்கள் பேராயத்திற்கு விண்ணப்பித்தார். உரோமை புனிதர்கள் பேராயத்தின் தலைவர் கார்டினல் மர்செல்லஸ் செமெராரோ உரோமையில் உள்ள துறவியர் பேராயம், விசுவாசப் பரப்புதல் பேராயம், விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் என பல பேராயங்களின் தடையில்லா சான்றிதழ் பெற்றபின் இறுதியாக 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி திருத்தந்தை பதினான்காம் லியோ உரோமையில் அன்னை ஸ்கொலாஸ்டிக்கா இறை ஊழியர் என்ற உயர் நிலையை அறிவித்ததுடன், புனிதர் பட்டத்திற்கான ஆய்வினை தொடங்க தடை இல்லை என்ற சான்றிதழையும் வழங்கினார்.
இறை ஊழியர் அன்னை ஸ்கொலாஸ்டிக்கா என்ற நல்ல செய்தியை 2026 ஆம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி மறை மாவட்ட பேராலயத்தில் மக்கள் அனைவருக்கும் வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு அம்புரோஸ் பிச்சைமுத்து அறிவித்தார். தொடர்ந்து அன்னை ஸ்கொலாஸ்டிக்காவின் புனிதர் பட்டத்திற்கான மறைமாவட்ட ஆய்வின் தொடக்க விழாவும் நடந்து உள்ளது.
இதையடுத்து அன்னை ஸ்கொலாஸ்டிக்காவின் இறை ஊழியர் அறிவிப்பு மற்றும் புனிதர் பட்டத்திற்கான படிநிலைகளை விளக்கும் செய்தியாளர்கள் சந்திப்பு திங்கள்சந்தை அடுத்த பட்டரிவிளையில் நடந்தது. இயேசுவின் திரு இருதய சகோதரிகள் சபை தலைவி அமுதா தியோஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தை சேர்ந்த அன்னை ஸ்கொலாஸ்டிக்கா புனிதர் பட்டத்திற்கான படி நிலையில் முதல் நிலையில் இருக்கிறார். இதைத் தொடர்ந்து 2 ஆம் நிலையான வணக்கத்திற்குரியவர் என்ற நிலை, 3-வது அருளாளர் என்ற நிலை, 4-வது புனிதர் என ஒரு நீண்ட பயணம் உள்ளது. இவரது புனித தன்மை பற்றிய ஆய்வுகள் வேலூர் மறைமாவட்ட ஆயரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு ஆதாரங்கள் தொகுக்கப்பட்டு உரோமை புனிதர்கள் பேராயத்திற்கு அனுப்பப்படும். பின்னர் அங்கு வரலாற்று பூர்வமான ஆய்வுகள், இறையியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் சரியாக இருப்பின் இறுதியாக கர்தினால்கள் குழு ஆய்வு மேற்கொள்ளும். அதன் இறுதியில் வணக்கத்திற்குரியவர் என்று அறியப்படுவார். அன்னை ஸ்கொலாஸ்டிக்கா ஏராளமான புதுமைகள் செய்து வருகிறார். அவரை நம்பி ஜெபிக்கும் பலருக்கும் இறைவனிடம் இருந்து அருள் வரங்களை பெற்று தருகிறார். அவர் செய்யும் புதுமைகள் அறிவியல் பூர்வமாக மனித சக்தியால் நடக்காத ஒன்றாக இருப்பின் உரோமை புனிதர்கள் பேராயத்தின் ஆய்வுக்குப்பின் அருளாளர், பின்னர் புனிதர் என அறிவிக்கப்படுவார். அன்னை சபை நிறுவிய அழகப்பபுரத்தில் சிற்றாலயம் உள்ளது. அங்கு வந்து வேண்டுவோருக்கு அன்னை வேண்டும் வரங்களை தந்து வருகிறார். பக்தர்கள் வசதிக்காக அங்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார். பேட்டியின் போது பட்டரிவிளை பங்கு தந்தை அருட்பணி ஜாண் விபின், சபையின் தூய வளனார் மறைமாநில சபை தலைவி அருட்சகோதரி புஷ்பராணி, பட்டரிவிளை கான்வென்டின் நிர்வாகி மற்றும் தாளாளருமான அருட்சகோதரி லீமா ரோஸ், பட்டரிவிளை கான்வென்டின் தலைமை சகோதரி சீலி, சாட்சிகள் அருட்சகோதரி பிஎஸ் மேரி, ஆசிரியை மல்லிகா மற்றும் பிரேம்தாஸ், ஏசுதாஸ், எவரீஸ்டர், ஜான் மோசஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இறை ஊழியர்
இறை ஊழியர் அன்னை ஸ்கொலாஸ்டிக்கா என்ற நல்ல செய்தியை 2026 ஆம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி மறை மாவட்ட பேராலயத்தில் மக்கள் அனைவருக்கும் வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு அம்புரோஸ் பிச்சைமுத்து அறிவித்தார்.
நன்றி அறிவிப்பு திருப்பலி
அன்னை ஸ்கொலாஸ்டிக்கா இறை ஊழியராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பட்டரிவிளை புனித பனிமய மாதா ஆலயத்தில் வரும் 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நன்றி அறிவிப்பு திருப்பலி நடைபெறுகிறது. குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமை ஏற்று நடத்தும் இந்த திருப்பலியில், பங்குத்தந்தை, இயேசுவின் திரு இருதய சகோதரிகள் சபையினர், அருட்பணியாளர்கள், பங்கு மக்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.