கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது.
இந்த ஜோதி ஓட்டத்தில் கலந்துகொண்ட, விளையாட்டு வீரர் வீராங்கனைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பாராட்டி, ஆட்சியர் அலுவலக முகப்பில் தேர்தல் விழிப்புணர்வு ஜோதியினை ஏற்றி வைத்து, தெரிவிக்கையில்-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டிற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் வியாழக்கிழமை (23.4.2026) அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்தின் முறையான வாக்குப்பதிவு விழிப்புணர்வு மற்றும் கல்வித் திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தியும், வாக்குரிமை பெற்ற அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையிலும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன்ஒருபகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் காலை 6 மணிக்கு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான களியக்காவிளையில் தொடங்கி, மார்த்தாண்டம், தக்கலை, வில்லுக்குறி, பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி பகுதி ஆகிய முக்கிய பகுதிகளை கடந்து வரும் போது, பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், முதல் வாக்காளர்கள் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆட்சியர் அலுவலக முகப்பிற்கு வந்தடைந்தார்கள். கடும் வெயிலையும் பொருட்படுத்தமால், தேர்தல் திருவிழாவில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்திய வீரர் வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் வரும் 23ம் தேதி வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நடனப்போட்டியில் முதல் பரிசுபெற்ற கன்னியாகுமரி பால்குளம் பொறியியல் கல்லூரி மாணவியர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்ததோடு, மாணவியர்களின் நடன நிகழ்ச்சியையும் கண்டு களித்தார்.
நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது சுகிதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, அலுவலர்கள், வீரர், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
தேர்தல் விழிப்புணர்வு ஜோதி
